புதுடில்லி : உ.பி.,யில் உள்ள அலஹாபாத் நகரின் பெயரை, 'பிரயாக்ராஜ்' என மாற்ற, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உ.பி., மாநிலம், அலகா பாதில், 15ல், மகர சங்கராந்தி நாளில், உலக புகழ் பெற்ற கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச், 4ல், மஹா சிவராத்திரி நாளில், கும்பமேளா முடிவடைகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த அலகாபாத் நகரின் பெயரை, பிரயாக்ராஜ் என மாற்றுவதென, பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும், உ.பி., மாநில அரசு, இரு மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது.
இந்நிலையில், அலகா பாத் நகரின் பெயரை, பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல், 10 நாட்களுக்கு முன் வழங்கப்பட்டதாக, உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், தெரிவித்தார். கடந்த ஓராண்டில் மட்டும், நாடு முழுவதும், 25 நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
'உ.பி.,யில் உள்ள பைசாபாத் மாவட்ட பெயரை, அயோத்தியா என மாற்றம் செய்வதற்கான கோரிக்கை, மாநில அரசிடம் இருந்து, மத்திய அரசுக்கு, இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை' என, கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநில பெயரை, 'பங்ளா' என, மாற்றம் செய்யக் கோரி, அம்மாநில அரசு விடுத்த கோரிக்கை, நிலுவையில் உள்ளது.
பங்ளா என்ற பெயர், அண்டை நாடான, பங்க்ளாதேஷ் எனப்படும், வங்கதேசத்தை போல் இருப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...