பல்வேறு கோரிக்கை களை
வலியுறுத்தி, மத்திய - மாநில அரசு ஊழியர்கள், நாடு முழுவதும், இன்றும், நாளையும்(ஜன.,8, 9) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது. இதில், மக்கள் சேவையில் உள்ள, ரயில்வே, வங்கிகள், அஞ்சல், காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும்.தமிழக அரசு ஊழியர்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும், மத்திய - மாநில அரசு ஊழியர்கள் என, 17 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். போராட்டம் காரணமாக, இன்று ஆட்டோக்கள் ஓடாது என, ஆட்டோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
அதேபோல், போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களும், இன்றைய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால், பஸ் சேவை பாதிக்கப்படும்.தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான, அண்ணா தொழிற் சங்கம், இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால், மாநிலம் முழுவதும் குறைந்த அளவில் பஸ்கள் இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில், வங்கி ஊழியர் சங்கங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. அதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...