Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஆபீஸ், பள்ளிகள் முடங்கின: பணிக்கு வராதவர்கள் பற்றி கணக்கெடுப்பு




சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. 80 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் ேபாராட்டத்தில் ஈடுபட்டதால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடின. பணிகள் முடங்கின. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தம் நேற்று முழு வீச்சில் தொடங்கியது. நேற்று காலை 10 மணியில் இருந்தே இந்த தொடர் வேலை நிறுத்தம் தொடங்கியது. அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை குறித்து கோஷம் போட்டனர். இதனால் அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கின. அரசுக்கு ஆதரவு தெரிவித்த சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் மட்டுமே பள்ளிக்கு நேற்று வந்தனர். அவர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் ஆசிரியர்கள் வராமல் போனதால் பள்ளிகள் மூடப்பட்டன. இதே நிலை அரசு அலுவலகங்களிலும் காண முடிந்தது. சொற்ப அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் அரசு அலுவலகங்கள் இயங்கின. பணிகளும் பாதிக்கப்பட்டன.  இந்நிலையில், சுமார் 80 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். முதல் நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க முடியாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தனர். சென்னையில் எழிலகத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன், வெங்கடேசன், அன்பரசு, சங்கரபெருமாள் ஆகியோர் தலைமையில் நேற்று காலை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கோரிக்கையை நிறைவேற்ற கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 8 லட்சம் பேர் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களின் நியாயமான கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கியுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் மாவட்ட, வட்டத்  தலைமையிடங்களில் மறியல் போராட்டமும் நடக்கிறது.
  இதற்கு இடைப்பட்ட காலத்தில் தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார், அதில் ‘‘நோ ஒர்க், நோ பே’’ என்று தெரிவித்துள்ளார். போராட்ட  நேரங்களில் இப்படி அறிவிப்பது வழக்கமான ஒன்றுதான். இது போன்ற மிரட்டலுக்கு ஜாக்டோ-ஜியோவில் உள்ளவர்கள் பயப்படாமல் 80 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதிலிருந்தே, புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நீதிமன்றமே புரிந்து கொண்டுள்ளது. இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் நலன் கருதி ஒரு மாணவர் இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு மனு செய்தார். அதை போட்டவரே வாபஸ் பெற்றுள்ளார். மேலும் இந்த வழக்கை மதுரை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  எனவே எங்கள் போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை முழு வீச்சில் நடக்கும்.   பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடங்களை நாங்கள் ஏற்கெனவே நடத்தி முடித்துவிட்டோம். தேவைப்பட்டால் கூடுதல் வகுப்புகள் நடத்தவும் தயாராக இருக்கிறோம். அரசு எங்களை கைது செய்தால் சிறை செல்லத்தயாராக இருக்கிறோம் என்றார். சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த வேலை நிறுத்தம் குறித்து நிருபர்களிடம் கூறும்போது, ‘பொதுத் தேர்வு நடக்க உள்ளதால், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் வேண்டுகோள் வைத்தோம். ஆனால் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் போராட்டம் எந்த அளவுக்கு பயணிக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அது  தீவிரம் அடையும் போது அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பல மாவட்டங்களில், பணிக்கு வராத அரசு ஊழியர், ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுப்பு துவங்கி விட்டதாக தெரிகிறது.
தலைமைச் செயலக சங்கமும் குதிக்குமா?
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாளான நேற்று முன்தினம் மாலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம்(சி மற்றும் டி பிரிவு) ஆகிய சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைமைச் செயலரை சந்தித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் போராட்டத்தில் தங்கள் சங்கம் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ேமற்கண்ட சங்கங்களில் உள்ளவர்கள் சிலர் நேற்று மதியம் தலைமைச் செயலக சங்கத்தை முற்றுகையிட்டு, எங்களிடம் கேட்காமல் நீங்களாக எப்படி முடிவை அறிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. இன்று மாலை பொதுக்குழு கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு, முக்கிய முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
85 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை
ஜாக்டோ-ஜியோ நேற்று தொடங்கிய தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் 55 சதவீதம் செயல்பட வில்லை. தொடக்கப் பள்ளிகள் 85 சதவீதம் இயங்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 45 ஆயிரம் ஆசிரியர்களில் 70 ஆயிரத்து 500 பேர் நேற்று பள்ளிக்கு வரவில்லை. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 59 ஆயிரத்து 509 பேரில், 6700 பேர் நேற்று பள்ளிக்கு வரவில்லை. தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களில்  85 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றுவோரில் 65 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive