Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம்: ஆரோக்கியம் காக்கும் "அரோமா தெரபி"


(S.Harinarayanan)



அதிக செலவு, பக்கவிளைவுகள் போன்றவற்றால் அலோபதி மருத்துவத்தின் மீது இருந்த மக்களின் பார்வை இன்று, ஆயுர்வேதம், சித்தா, அக்குபஞ்சர், ஹோமியோபதி, யுனானி போன்ற மாற்று மருத்துவமுறைகளின் மீது திரும்பியுள்ளது. ஆனால், இவற்றுக்கெல்லாம் தனியாக சிகிச்சையகங்கள், மருத்துவர்கள் உள்ளனர். அதற்கான மாற்றுவழிதான் அரோமா தெரபி(Aroma therapy)அரோமா என்பது நறுமணத்தையும், தெரபி என்பது சிகிச்சையையும் குறிக்கும். இந்த வாசனை மருத்துவம் மூலம் அழகுகலை என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா, எகிப்து, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டுள்ளது. முக்கிய சில தாவரங்கள், பூக்கள், வாசனை மற்றும் மூலிகை பொருட்களை காய்ச்சி வடிகட்டி அதலிருந்து கிடைக்கும் ஆயிலை எடுத்து பயன்படுத்துவதாகும்.

குறிப்பாகச் சொல்வதானால், இயற்கையாக தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறுகளின் வாசனை மூலம் உடல், மன நலன்களை மேம்படுத்த சிகிச்சை அளிக்கும் கலை மற்றும் அறிவியலே அரோமாதெரபி.

இந்த அத்தியாவசியமான நறுமண எண்ணெய்கள் நோயாளிகளின் உடல் மற்றும் மனதை மிகப்பெரிய அளவில் மேம்படுத்துகின்றன. இந்த எண்ணெய் வகைகள், நுகரும் உணர்வையும், உடலில் நேர்மறை விளைவுகளையும் தூண்டுகின்றன. நறுமண எண்ணெய்களில் இருந்து வரும் மணத்தை நுகரும்போது, அது மூளையின் செயல்பாட்டையும், மற்ற உடலியல் செயல்பாடுகளையும் தூண்டுவதாக பெருமளவில் நம்பப்படுகிறது.

மேலும், நோய் எதிர்ப்பு அமைப்பு, வலி மற்றும் எரிச்சல் குறைப்பு, தோல்நோய் மற்றும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளை கொல்வதிலும் உறுதுணையாக உள்ளது. இந்த நறுமண எண்ணெய்கள் பச்சிலைகள், பூக்கள், மரங்கள், தண்டுகள், இலைகள், வேர்கள், கனிகள் போன்றவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பொதுவானதாக உள்ளவை யூகலிப்டஸ், ரோஸ், எலுமிச்சை தைலம், மல்லிகை, பாதாம், சாமந்தி எண்ணெய்களாகும்.

இந்த இயற்கை எண்ணெய்களின் வேறுபட்ட கலவைகள், பிற மூலிகை தயாரிப்புகளைக் காட்டிலும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. காரணம், இதில் உள்ள மிகச் சிறிய வாசனை மூலக்கூறுகள் நுகரும்போதோ, தோலின் வழியாகவோ உடலால் உடனடியாக ஈர்க்கப்பட்டு ரத்தநாளங்களில் நுழைந்து உடல் முழுக்கச் சென்று நோயைக் குணமாக்குவதற்கான சக்தியை உடலுக்கு அளிப்பதாகக் கூறப்படுகிறது. 

நறுமண மருத்துவச்  சிகிச்சையாளர்கள் (Aromatherapiest), நறுமணமருந்து அல்லது அத்தியாவசியமான எண்ணெய்களைக் கொண்டு பல வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக் கூடியவர்களாக இருப்பர். அவர்கள் நோயாளிகளுக்கு ஏற்ப நறுமண எண்ணெய்களைக் கலந்து, அதைப் பயன்படுத்தி நோயின் தன்மைக்கு ஏற்ப மசாஜ் செய்வர். மேலும், இயற்கை எண்ணெய்களை நுகரச் செய்வது, மேற்பூச்சு பயன்பாடு,  நீரில் முழ்கியிருக்கச் செய்வது போன்றவற்றின் மூலம் நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிப்பர்.

இந்த வகையில், நோயாளியின் உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த பிரச்னைகளுக்கு பல்வேறு சிகிச்சை முறைகளை அரோமாதெரபிஸ்ட் கையாள்கிறார்கள். மனநிலை விரிவு, அறிவாற்றல் செயல்பாடுகளான நினைவுத்திறன், மனஒருநிலை, தூக்கம் மேம்பாடு உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகள் நறுமண மருத்துவச்  சிகிச்சை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.

இந்தியாவில் மிகச் சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே அரோமாதெரபி கோர்ஸை வழங்குகின்றன. இதில், சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலை பட்டயம் போன்ற கோர்ஸுகள் உள்ளன. இவற்றுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2.  முதுநிலை பட்டயம் பெற பட்டப் படிப்பு  முடித்திருக்க வேண்டும். கோர்ஸுக்கு ஏற்ப ஒருவாரம் தொடங்கி, 3 ஆண்டுகள் வரை கல்வி இருக்கும்.  

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அரோமாதெரபி அண்ட் காஸ்மடாலஜி- கொல்கத்தா, இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின்ஸ்- கொல்கத்தா, சயின்ஸ் அண்ட் ஆர்ட் அகாதெமி ஆப் ஹேர் அண்ட் பியூட்டி கல்ட்சர்- சென்னை, சி.வி. இன்டர்நேஷனல் அகாதெமி ஆப் பியூட்டி- மும்பை, இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஆஸ்தெடிக்ஸ் அண்ட் ஸ்பா- புனே, தி குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் அரோமாதெரபி- கொல்கத்தா உள்ளிட்டவை அரோமாதெரபி கல்வியை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

மேலும் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் போர்ட் ஆப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின்ஸ் நிறுவனம் 2 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டம், ஓராண்டு கொண்ட பட்டயக் கல்வியை தொலைநிலைக் கல்வியாக அளித்து வருகிறது. அதோடு, ஈவ்ஸ் பியூட்டி பார்லர் அண்ட் அகாதெமி, ஃபிராகரன்ஸ் அண்ட் ஃபிளேவர் டெவலப்மெண்ட் சென்டர், ஃபாரிடா பியூட்டி பார்லர் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஆனந்தா ஸ்பா இன்ஸ்டிடியூட் போன்றவையும் அரோமாதெரபி கோர்ஸை நடத்துகின்றன.

பெரும்பாலான அரோமாதெரபிஸ்டுகள், ஸ்பா, அழகு நிலையங்கள், மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், வர்ம முறை மருத்துவர்கள், மசாஜ் சிகிச்சையகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், பொழுதுபோக்கு விடுதிகள், உல்லாச கப்பல்கள் போன்றவற்றுடன் இணைந்தே பணியாற்றுகின்றனர். 
இவர்களோடு அல்லாமல், அரோமாதெரபிஸ்டுகள் தனியாக வீட்டிலிருந்தோ அல்லது கிளினிக் அமைத்தோ மருத்துவம் செய்யலாம். தங்களின் திறன், தொடர்புகளுக்கு ஏற்ப அவர்கள் இந்தத் தொழிலில் சிறந்து விளங்க முடியும். நறுமண மருந்து குறித்த ஆழ்ந்த அறிவு பெற்றவர்கள், அவற்றை உற்பத்தி செய்வது, சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பது, ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபடலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive