ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் திங்கள்கிழமை
பணிக்குத் திரும்பாவிட்டால் அந்தப் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக
அறிவிக்கப்படும். அந்த ஆசிரியர்கள் அதே பள்ளியில் மீண்டும் பணியாற்ற
முடியாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின்கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்குத் திரும்ப வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இதேபோன்று மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசு பல முறை வலியுறுத்தியது. இருப்பினும் இந்த அறிவுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 407 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்று இறுதி அவகாசம்: இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் அ.கருப்பசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து வகை ஆசிரியர்களும் உடனடியாக திங்கள்கிழமை பணியில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்தவித, துறை சார்ந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணியேற்கலாம். மாறாக அன்றைய தினம் முடிவில் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, உத்தேச காலிப் பணியிடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.
கட்டாய பணியிட மாறுதல்: இந்தப் பட்டியலின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர வந்தால் அவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற முடியாது. மாறாக கல்வி மாவட்ட அளவிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஏதேனும் ஒரு காலிப் பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உள்பட்டு பணி ஏற்க ஆணை வழங்கிட வேண்டும்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் திங்கள்கிழமைக்குள் தவறாது பணியில் சேரவேண்டும் என உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ
பேச்சுவார்த்தைக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, இரா.தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: கோரிக்கைகள் குறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. நல்ல முடிவு எடுக்கப்படும் என ஓர் அமைச்சரும், கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என ஓர் அமைச்சரும் கூறுகின்றனர்.
நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்றால், மாநில அரசுக்கு நிதி வருவாயைப் பெருக்க அரசு ஊழியர்களுக்குத் தெரியும். ஜனநாயக ரீதியாகப் போராடி வரும் எங்கள் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. பள்ளிகளை மூடுவதாக நாங்கள் பொய்யான தகவலைக் கூறவில்லை. பள்ளிகள் இணைப்பு என்கிற பெயரில் பள்ளிகள் மூடப்படுகின்றன. அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. எங்களை எப்போது அழைத்தாலும் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என ஆணை பிறப்பித்தால் நிச்சயம் எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். அமைச்சர், அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தங்களை அழைத்துப் பேசும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது. இதற்காக எந்தவித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெறும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...