(S.Harinarayanan)
இரைப்பை
மற்றும் குடல் இயக்கம் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு ஆஸ்திரியா நாட்டின்
தலைநகரான வியன்னாவில் நடந்தது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில்
உணவுச்சங்கிலியில் பிளாஸ்டிக் பொருட்கள் மெல்ல மெல்லக் கலந்து வருவது,
சோதனையின் மூலமாக விளக்கப்பட்டது. உலகமெங்கிலும் உள்ள எட்டு நாடுகளைச்
சேர்ந்த 8 நபர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களது உடல்களை
சோதனை செய்ததில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தினை மனித உடம்பில்
ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
பின்லாந்து,
ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், போலந்து, ஆஸ்திரியா, ரஷியா, பிரிட்டன் ஆகிய
நாடுகளைச் சேர்ந்த 8 நபர்களை மருத்துவர்கள் ஆராய்ச்சியில் பங்குபெறச்
செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும்
பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவை
வழங்கப்பட்டிருக்கின்றன. சில வாரங்கள் நீடித்த இந்த சோதனையின் முடிவில் 8
பேரின் உடல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் பங்குபெற்ற
அனைவரின் உடலிலும் 50 – 500 மைக்ரோ மீட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் துகள்கள்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
9
வகையான பிளாஸ்டிக் துகள்கள் அவர்களது உடம்பில் கலந்திருந்ததாக மருத்துவக்
குழுவினர் தெரிவிக்கின்றனர். பாலி புரொப்பலீன்(Polypropylene), பாலி
எத்திலீன் டெராப்தலேட் (Polyethylene Terephthalate) ஆகியவை அதிக அளவில்
இருந்தது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. உடம்பில் அதிகரிக்கும்
பிளாஸ்டிக் பொருட்களால் குடல் மற்றும் இரைப்பை ஆகியவை கடுமையாக
பாதிக்கப்படும் என்கிறார்கள் அந்த ஆராய்ச்சியை நடத்தியவர்கள். இந்த சிறிய
அளவிலான பிளாஸ்டிக் துணுக்குகள் ரத்த செல்களில் தேங்கி உடலின் வளர்சிதை
மாற்றத்தினைத் தொடர்ந்து பாதிக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
எப்படி உடம்பில் கலக்கிறது ?
பிளாஸ்டிக்
பொருட்களால் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களைப் பயன்படுத்துவது உடம்பில்
பிளாஸ்டிக் துகள்கள் சேரும் ஆபத்தினைப் பல மடங்கு அதிகரிக்கின்றது. மேலும்,
உணவுச் சங்கிலியில் நமக்குக் கீழே இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின்
உடம்புகளிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது
நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை உட்கொள்ளுவதன் மூலமும் நமக்கு
இப்பிரச்சனை வரலாம்.
பிளாஸ்டிக்
உற்பத்தியைக் குறைக்க வேண்டிய காலக்கட்டத்தையெல்லாம் நாம் 10 ஆண்டுகளுக்கு
முன்னரே கடந்துவிட்டோம். சுற்றுப்புறத் தீங்கினைக் குறைக்கும் விதத்தில்
அவற்றை மறு சுழற்சி செய்வது நிலைமையினைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உலகம்
முழுவதும் உள்ள கடல்களில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை 150
மில்லியன் டன்கள். மேலும் ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக்
குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன. கழிவுப் பொருள் மேலாண்மையைப் பற்றி
நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய காலம் இது என்பதையே இந்த ஆய்வு
உணர்த்துகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...