பள்ளிகளில் தினமும் திருக்குறள்,
நீதிக்கதைகளுடன் மாணவர்களுக்கு பிரார்த்தனை கூட்டம் நடத்தவேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வகுப்பு நடத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குடும்பம், சமுதாய சூழ்நிலைகளால் மனரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் நல்லொழுக்கங்களை மறந்து தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
மேலும் வகுப்புகளில் மாணவர்கள் இடையிலான மோதல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இவைகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளிகளில் 25 நிமிடம் காலை பிரார்த்தனை கூட்டம் நடத்தி நல்லொழுக்கங்களை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோல் பள்ளிகளில் காலை வழிபாட்டில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஒரு சில பள்ளிகளில் நல்லொழுக்கங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டத்தை முறையாக நடத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு 25 நிமிடங்கள் காலை வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விளக்கவுரையுடன் திருக்குறளை வாசிக்கவேண்டும். மாணவர்கள் கதைகளை விரும்பி கேட்பார்கள் என்பதால், ஒரு நீதிக்கதை சொல்ல வேண்டும்.
மாணவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது, இன்றைய சிந்தனை, பொது அறிவு, செய்தி வாசித்தல், தியானம் என ெமாத்தம் 12 நிகழ்ச்சிகளுக்கு 25 நிமிடங்களை பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில பள்ளிகளில் அட்டவணையில் உள்ளவற்றை முறையாக பின்பற்றுவது கிடையாது என்று புகார்கள் வந்துள்ளது. எனவே, பள்ளிகளில் காலை வழிபாட்டினை தலைமை ஆசியர்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
பயோமெட்ரிக் கருவி
காலை வழிபாட்டிற்காக ஆசிரியர்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதாக புகார்கள் நீடித்து வருகிறது. எனவே, ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 12ம் தேதிக்குள் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்றும், விடுபட்ட பள்ளிகளில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...