அரசு
பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர்
வலியுறுத்தியுள்ளனர்.தமிழக பள்ளி கல்வியில், சீர்திருத்த பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள்,
தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக, மாணவர் எண்ணிக்கை
குறைந்த தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளுடனும், நடுநிலை பள்ளிகள்,
மேல்நிலை பள்ளிகளுடனும் இணைக்கப்பட உள்ளன.
இந்த வகையில், 3,500 பள்ளிகளை இணைத்து, அவற்றில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, ஒரே வளாகத்தில் வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இந்த இணைப்புக்கு, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மாணவர்களை தனியாக கவனித்து, பாடம் நடத்துகிறோம். இந்த பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் போது, சிறிய வகுப்பு மாணவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.மேலும், பள்ளிகளை இணைப்பதால், அருகாமை பள்ளிகளின் எண்ணிக்கை குறையும். ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பும் குறையும். எனவே, இந்த முயற்சியை கைவிட்டு, பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலர், தாஸ் கூறியதாவது:தொடக்க பள்ளிகள் இணைப்பு என்பது, பள்ளிகளை மூடுவதற்கு சமமான நடவடிக்கை. மாநிலம் முழுவதும், 3,500 பள்ளிகளை இணைத்தால், ஆயிரக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும்.கிராம புறங்களின் பள்ளிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, தமிழக அரசு, இந்த முயற்சியை கைவிட வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரித்து, பள்ளிகளை தற்போதுள்ள நிலையில் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...