பள்ளி
மாணவர்களின் கல்விக்கு என்று பிரத்யேகமாக ‘கல்வி தொலைக்காட்சி’ என்ற சேனலை
தமிழக அரசு விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே இதுதொடர்பான அறிவிப்பை
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, 24 மணி நேரமும் செயல்படும் இந்த
சேனலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். கல்வி
தொலைக்காட்சியில் ‘ரைம்ஸ்’ முதல் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வரை அனைத்து
வகுப்பு மாணவர்களுக்கும் கல்வியை மேலும் எளிமைப்படுத்தும் வகையில்
நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
தனியார் தொலைக்காட்சிகளை போலவே முந்தைய
நாளிலேயே அடுத்த நாளின் நிகழ்ச்சி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு, அதன்படி
நிகழ்ச்சிகள் அந்த சேனலில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
இந்த கல்வி தொலைக்காட்சி சேனல் தமிழக அரசு
கேபிளில் 200-வது எண்ணில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த சேனலில் ஒளிபரப்பு செய்வதற்கான நிகழ்ச்சிகள் தொடர்பான உள்ளடுகளை
50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு
வருகின்றனர்.
மாணவர்களுக்கு கல்வியை எளிதாக கொண்டு
செல்லும் வகையில் பாடல்கள், அனிமேஷன் காட்சி வடிவிலான நிகழ்ச்சிகளும் இடம்
பெறுகிறது. கல்வி சார்ந்த அறிவிப்புகளை போன்று, கல்வி உதவித்தொகை,
பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடர்பான தகவல்களையும் வெளியிட
திட்டமிடப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை நேரலையாகவும்,
தங்கள் சந்தேகங்கள் குறித்து நிபுணர்களோடு கலந்துரையாடும் வகையிலும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில் கல்வி தொலைக்காட்சியை
தொடங்கும்போது 8 மணி நேரத்தில் 15 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
அதன் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் ஒளிபரப்பப்படும்.
கல்வி தொலைக்காட்சிக்கு என்று சென்னை
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8-வது மாடியில் நவீன
தகவல் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய ஸ்டூடியோ அமைக்கப்பட உள்ளது. இதுதான்
கல்வி தொலைக்காட்சியின் தலைமையகமாக செயல்படும். கல்வி தொலைக்காட்சிக்காக
கேமரா மற்றும் பிற உபகரணங்கள் வாங்குவதற்காக அரசு சார்பில் ரூ.1 கோடியே 30
லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...