கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் திறன்மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு குறைதீர் பயிற்சிஅளிக்க உதவுதல், பாடநூல்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தக்க ஆதரவு வழங்கப்படும்.
இணைய வளங்களைப் பகிர்ந்தளிக்க... அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடுமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள பாடங்கள் சார்ந்த காணொலிக் காட்சிகள் மற்றும் விரைவுத் துலக்கக் குறியீடுகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணைய வளங்கள்ஆகியவைகளைஅவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்யும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கத் தேவையான கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள்,தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக, அவ்வப்போது, தேவையின் அடிப்படையில் அனுப்பிவைக்கப்படுவர். தேவைப்பட்டால் அங்குள்ளஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி, அந்தமான் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி மேமன் தாமஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...