காலநிலை மாற்றம்: போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!
காலநிலை மாற்றம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
உலகளவில் கார்பன் வெளியீட்டில் ஆஸ்திரேலியாவும் ஒரு மிகப்பெரிய நாடாக உள்ளது. அந்நாட்டில் நிலக்கரியைச் சார்ந்து நிறைய மின் உற்பத்தி ஆலைகள் இருப்பதாலேயே கார்பன் வெளியீடு மிக அதிகமாக உள்ளது. ஐநாவின் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கு ஏற்ப ஆஸ்திரேலிய அரசு தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றவில்லை. புதிய எரிசக்தி கொள்கையால் கூட்டணி அரசிலும் பிளவு ஏற்பட்டது. பிரதமர் பதவியிலிருந்து மால்கம் டர்ன்புல் வெளியேற்றப்பட்டதற்கு காலநிலை செயற்பாட்டாளர்களும் முக்கிய காரணமாகும். தற்போதைய பிரதமரான ஸ்காட் மாரிசன் மீதும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெராவின் பள்ளிகளில் இந்த வாரத்தில் போராட்டங்கள் எழுந்தன.
இப்போராட்டங்களை அரசு விமர்ச்த்துள்ளது. போராட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்த பிரதமர் ஸ்காட் மாரிசன், பள்ளிகளில் கற்றல் அதிகமாகவும், போராட்டங்கள் குறைவாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். இப்போராட்டங்களால் சிறுவர்கள் தோல்வியை நோக்கிச் செல்வதாக அந்நாட்டு வளத்துறை அமைச்சரான மேட் கேனவன் தெரிவித்திருந்தார். “பள்ளியிலிருந்து வெளியேறி போராடுவதால் நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளப்போவதில்லை” என்று கேனவன் கூறினார்.
இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து இன்று (நவம்பர் 30) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன், பிரிஸ்பேன், பெர்த் உள்ளிட்ட இதர நகரங்களின் பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளும், சிறுவர்களும் வெளியேறி போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இது எங்களது முதல் போராட்டம். எங்களது முதல் இயக்கம். அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் மேலும் போராட்டங்களை நடத்திக்கொண்டே இருப்போம்” என்று கூறினார். சிறுவர்களின் போராட்டத்துக்கு ஆசிரியர்கள், பெற்றோரின் ஆதரவும் வலுவாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...