செய்யாறு அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தையொட்டி, மாணவர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், பல்வேறு சூழல்களுக்கு இடையே பயிலும் மாணவர்கள் ஒன்றுகூடி, தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் அறிவு, சமூகப் பண்பு, எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் போன்றவை வளர்க்கப்படுகிறது. மேலும், பள்ளி சிறப்பு அம்சங்களை அறிவதோடு தனது பலம், பலவீனத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
அதன்படி, பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ், செய்யாறு அடுத்த நெடுங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, பாப்பாந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு, தலைமை ஆசிரியர் பா.சுடர்கொடி, பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், இந்துமதி, சையத்அக்பர் ஆகியோர் முன்னிலையில், மேளதாளம் முழங்க மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.சக்திவேல் தலைமை தாங்கி, பள்ளி பரிமாற்ற திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு தாலுகா, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவண்ணாமலை தாலுகா வேடியப்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இடையே, பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி ராதாபுரம் பள்ளியில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், தமிழ் பாடம் கற்பித்தல், குழு செயல்பாடு, விளையாட்டு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் ஆகியன குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியைகள் பரிதா ரெகானா, சசிகலா குமாரி உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...