கூகுள் மேப்பை பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஆந்திர மாநில கொள்ளையர்கள் 4 பேரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் டாக்டர் கவுசிக் வீட்டில் கடந்த ஜூன் மாதம், 2 வைர நெக்லஸ்கள், 5 ஜோடி வைர கம்மல்கள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயின. கவுசிக் குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்தபோது இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல், தெலங்கானா போலீசார் மூலம் நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த சதீஷ் ரெட்டி, நரேந்திர நாயக், ஸ்ரீனிவாஸ், சுதீர் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த கும்பல், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வசதியானவர்களின் வீடுகளை குறிவைத்து, கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.
கொள்ளையர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சென்னையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி கேட்டபோது, ஜூன் 12-ஆம் தேதி நுங்கம்பாக்கம் டாக்டர் வீட்டிலும், தி.நகர் மூசா தெருவில் டாக்டர் பாலகிருஷ்ணன் இல்லத்திலும், இதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டிலும் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கொள்ளையர்களின் வாக்குமூலம் பற்றிய தகவல்களை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, ஆய்வாளர் ரித்தீஷ்குமார் ஆகியோர் ஹைதராபாத் விரைந்து, கொள்ளையர்கள் நால்வரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் 7 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பகலில் கார் டிரைவர்கள் போல் நகரின் முக்கிய பகுதிகளில் நோட்டமிட்டு, இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், தேனாம்பேட்டை ஆகியவை பணக்காரர்கள் வசிக்கும் பகுதி என இணையம் மூலம் அறிந்ததாகவும், பின்னர் கூகுள் மேப் உதவியுடன் அந்த இடங்களுக்குச் சென்று கொள்ளையடித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் சென்னையில் கொள்ளையடித்த 120 சவரன் நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இந்த கொள்ளை கும்பலுக்கு சதீஷ்ரெட்டி தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் சதீஷ்ரெட்டி மீது நாடு முழுவதும் 52 கொள்ளை வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...