ஒரு பாடப் பொருட்களை ஏதாவது ஒரு காரண
காரியத்தோடு தொடர்புப்படுத்தி சொல்லிக்கொடுத்துவிட்டால் குழந்தைகள் எவ்வளவு கடினமான பாடப்பொருளையும் எளிதில் நினைவில் கொள்வார்கள்.அந்த வகையில்...மூன்றாம் வகுப்பில் *எளிய எந்திரங்கள்* என்னும் தலைப்பில் உள்ள பாடப்பொருளை (திறன்), மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும் வழியொன்றை இங்கு காண்போம்.
மூவகை நெம்புகோல் களையும் வேறுபடுத்திப் பார்க்க நாம் செய்யவேண்டியது... எளிய எந்திரத்தின் *நடுப்பகுதியில்* உள்ளது என்ன ? என்பதைத்தான்.
இப்பொழுது , நான் *மூன்றாம் வகை* நெம்புகோலில் இருந்து தொடங்குகிறேன்.
மூன்றாம் வகை நெம்புகோலுக்கு உதாரணம் இடுக்கி. இந்த இடுக்கியின் ஒருபுறம் பொருளை எடுக்க பயன்படும் பகுதி உள்ளது. இப்பகுதியை பளு என்கிறோம். அதன் மறுமுனையானது மேலும் கீழும் கிடைமட்டமாக வரும் இரும்புப் பட்டையை இணைக்கும் பகுதியாகும். இந்த பகுதியானது ஆதாரப்புள்ளி ஆகும். இந்த இடுக்கியின் *நடுப்பகுதிதான்* நாம் கைகளால் அழுத்திப் பிடிக்கும் பகுதி. இதனை "திறன்" என்போம். இந்தத் "தி ற ன்" #மூன்று# எழுத்துக்களை உடையது. இதனை எளிதில் நினைவில் கொள்ள... "திறன்" நடுப்பகுதியில் அமையுமாறு உள்ள எளிய எந்திரங்கள் அனைத்தும் #மூன்றாம்# வகை நெம்புகோல் என்று எளிதில் நினைவில் கொள்ளலாம்.
அடுத்து *இரண்டாம்* வகை நெம்புகோல் பற்றி பார்ப்போம். இதற்கு உதாரணம் , எலுமிச்சம் பழம் , சாறு பிழியும் கருவி. இக்கருவியில்... நாம் கைகளால் அழுத்தும் பகுதியை திறன் என்போம். எதிர் முனையானது இக்கருவியின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பகுதியாகும். இதனை ஆதாரப்புள்ளி என்போம். *நடுப்பகுதியில்* பழத்தினை வைப்போம். இப்பகுதியை பளு என்போம். இங்கு கவனியுங்கள் "பளு" என்பது எத்தனை எழுத்து ? ஆம் , #இரண்டு# எழுத்து. எந்த எளிய எந்திரங்களின் *நடுப்பகுதியில்* பளு அமைந்தாலும் , அவையெல்லாம் #இரண்டாம்# வகை நெம்புகோல் என்று எளிதாக நினைவில் கொள்ளலாம் அல்லவா?
அடுத்ததாக , *முதலாம் வகை* நெம்புகோல் பற்றிப் பார்ப்போம். இதற்கு உதாரணம் கத்தரிக்கோல். கத்தரிக்கோலின் இரண்டு துவாரங்கள் உள்ள பகுதியைத் திறன் என்போம். அதற்கு எதிர் முனையானது துணியை வெட்டப் பயன்படும் பகுதி. இதனை பளு என்போம். இப்போது *நடுப்பகுதிக்கு* வாருங்கள். கத்தரிக்கோலின் இரண்டு பாகங்களையும் இணைக்கும் மையப்புள்ளியினை #ஆதாரப்புள்ளி# என்போம். இதில் எழுத்து எண்ணிக்கையைப் பார்க்காமல் #ஒன்றுக்கும்# மேற்பட்ட எழுத்துகள் இருப்பதால் இதனை ஒன்றாம் வகை (அல்லது) முதல் வகை நெம்புகோல் என்று எடுத்துக் கொள்ளலாம்.
மீண்டும் ஒருமுறை சுருக்கமாக...
"திறன்" (மூன்றெழுத்து) நடுவில் அமைந்தால் அது மூன்றாம் வகை நெம்புகோல்.
பளு (இரண்டெழுத்து) நடுவில் அமைந்தால் அது இரண்டாம் வகை நெம்புகோல்.
ஆதாரப்புள்ளி (ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துக்கள்) நடுவில் வந்தால் அது முதல் வகை நெம்புகோல் ஆகும்.
#வளர்வோம்#
ச.சந்திரசூட்
02.12.2018
ஆப்பிள் பழம் தின்றான் என்பதை மாணவரின் மனதில் எளிதாக பதிய வைத்து விட்டு முதல் எழுத்துகள் முறையே மூன்று வகை நெம்புகோல்களின் மையமாக வரும் அதாவது ஆப்பிள்...ஆ_ஆதாரத்தானம்,பழம்_ப- பளு,தின்றான் _தி-திறன் எனக் கற்பித்தலும் மற்றுமொரு எளிய முறை.
ReplyDelete