தமிழக
பள்ளி கல்வித்துறையின் புதிய முயற்சியாக, மாணவ - மாணவியரை புகைப்படம்
எடுத்து, வருகையை பதிவு செய்யும் திட்டம், இன்று அறிமுகம்
செய்யப்படுகிறது.தமிழக அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பு, நவீன கணினி
ஆய்வகம், பயோ மெட்ரிக் என, பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்
செய்யப்படுகின்றன. இந்த வகையில், வகுப்பில் உள்ள மாணவ - மாணவியரை
வருகைப்பதிவு செய்வதில், புதிய தொழில்நுட்பத்தை, பள்ளி கல்வித்துறை, இன்று
அறிமுகம் செய்கிறது.
சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடக்கிறது. பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, புகைப்படம் எடுத்து வருகையை பதிவு செய்யும், ஆன்ட்ராய்ட் செயலி தொழில்நுட்பத்தை, அறிமுகம் செய்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் சார்பில், 'ஆன்ட்ராய்ட்' வகை ஆப் வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது.இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ் மாறன் கூறியதாவது:மாணவ - மாணவியரை, வகுப்பில் புகைப்படம் எடுக்கும்போது, அவர்களின் முக அடையாளம் அடிப்படையில், வருகைப்பதிவு செய்யப்படும். சீனாவில், ராணுவத்திலும், வேறு சில துறைகளிலும் இந்த திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில், அசோக் நகர் பள்ளியில், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி செயல்படும்?வகுப்பில் உள்ள மாணவ - மாணவியரின் புகைப்படங்கள், முதலில் சேகரிக்கப்பட்டு, அவை, ஆன்ட்ராய்ட் ஆப் மற்றும் கணினி சர்வரில் உள்ளீடு செய்யப்படும். வகுப்பு ஆசிரியர், தங்கள் மொபைல் போனில் ஆன்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாட வேளையும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவ - மாணவியரின் முகம் பதிவாகும் வகையில், ஒரே ஒரு புகைப்படம் எடுத்தால் போதும். அந்த புகைப்படத்தில் பதிவாகும் மாணவ - மாணவியரின் முகங்கள், செயலி வழியாக வருகைப்பதிவு பட்டியலில் இணைந்து விடும்.இந்த தொழில்நுட்பத்தால், வருகைப்பதிவு எடுக்கும் நேரம் குறையும். கணினி முறையில், வருகைப்பதிவு விபரங்களை தொகுத்து வைக்கலாம். அவற்றை யாரும் போலியாக திருத்த முடியாது. இது, முழுக்க முழுக்க, 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' என்ற, கணினி வழி செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் செயல்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...