கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மனிதமுள்ள மனிதர்கள்
'கோட்டை இல்லை,கொடியும் இல்லை, அப்பவும் நான் ராஜா'
இந்த வரிகள் புதுக்கோட்டை சிகரம் சதீஷ்க்கு நிச்சயம் பொருந்தும்!
லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒரு படிப்பு, பின் வேலை,கை நிறைந்த பணத்தை வைத்துக் கொண்டு, எந்த நாட்டில் விடுமுறையைக் கழிக்கலாம், ஹெலிஹாப்டரில் போவோமா,க்ருஸில் பயணிப்போமா என தங்களை மட்டுமே சிந்திக்கும் இளைஞர்களுக்கு மத்தியில்,தமிழ் நாட்டில் பல நல்ல காரியங்கள் செய்து வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிகரம் சதீஷ், தற்போது 'கஜா' புயல் நடத்திய கோர வேட்டையிலும் களம் இறங்கி தன் கடமையைச் செய்ததோடு, வெளிநாட்டில் மனிதநேயத்தோடு செயல் புரியும் நம் மக்களையும் ஒருங்கிணைத்து செயலாற்றி வருவது மிகவும் பாராட்டுக்குரியதே !
இதை பார்க்கும்போது வீரம் படத்தில் நடிகர் அஜீத் சொன்ன வசனம் தான் ஞாபகம் வருகிறது.'நமக்குப் பக்கத்துல உள்ளவங்களை நாம பாத்துக்கிட்டா,நமக்கு மேலே உள்ளவன் நம்மளைப் பாத்துப்பான்'.
'கஜா' புயலின் பேரழிவுகளைப் பற்றிய செய்திகளை, உலகத்திற்கு உடனுக்குடன் அளித்து வருவதோடு நிவாரணப் பணிகளையும் முழு வீச்சில் களத்தில் செய்து வரும் நம் தினமலர், இந்த இளம் ஆசிரியரின் இடைவிடா உழைப்பை உலகரியச் செய்வதை கடமையென்றே எண்ணுகிறது. சூறையாடிய இச்சூறாவளி,பல லட்சக்கணக்கான பயன் தரும் மரங்களான மா,பலா,வாழை என அடியோடு சாய்த்து விட்டும்,ஏழை எளிய மக்களின் இருப்பிடங்களை அழித்தும்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு பெரும் சேதத்தை உண்டாக்கிவிட்டது.
தவிர 40 க்கும் மேற்பட்ட உயிர்கள்,ஆயிரக்கணக்கான கால்நடைகள்,லட்சக்கணக்கில் மரங்கள் என கஜா அழித்த நாசம் கொஞ்சநஞ்சமில்லை. கவலையும் கண்ணீரும் மட்டுமே முடிவல்ல என களம் இறங்கிய தன்னால்வர்கள் தான், அம்மக்களுக்கு மிகவும் நம்பிக்கை நட்சத்திரங்கள் ! உள்ளூர் அமைப்புகள் ஆற்றிய தொண்டுகளைப் போலவே, வெளிநாட்டுத் தமிழர்களும் பெரும் உதவி புரிந்து வருகின்றனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள்
வட அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு பௌண்டேஷன், எய்ம்ஸ் இந்தியா, நம்பிக்கை விழுதுகள், அக்னி யூத், 'மொய் விருந்து வைத்து நிதி திரட்டும் வட கரோலினா வாகை பெண்கள் தன்னார்வக்குழு', டல்லாஸில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் தோழி பிரவீனா, லாவண்யா, மகேந்திரன் பெரியசாமி, ராமலிங்கம்,வித்யா, ரிச்சர்ட், வலைத்தமிழ் பார்த்தசாரதி, துபாயில் இருந்து நிமலன், சீனாவிலிருந்து சூர்யகலா, ஸ்காட்லாந்திலிருந்து காயத்ரி,ஜப்பானிலிருந்து 'முழுமதி' அறக்கட்டளை என எத்தனை எத்தனை நல்ல உள்ளங்கள் !
தன்னார்வ ஆசிரியர்களின் கூட்டமைப்பான,சிகரம் சதீஷ் ஒருங்கிணைப்பாளராக செயல்படும், 'கல்வியாளர்கள் சங்கமம்' என்ற அமைப்பு, வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் நன்கொடைகள், நிவாரணப் பொருட்களைப் பெற்று, சீரும் சிறப்புமாக களப்பணி ஆற்றிவருகிறது. திரைத்துறையினரும் உதவி செய்து வருகின்றனர். இதில் நடிகர் ஆரி,தனது 'மாறுவோம்,மாற்றுவோம்' அமைப்பின் மூலம் நேரடியாக களம் இறங்கி செயலாற்றி வருகிறார்.நடிகர் விஷால் மற்றும் ஜீ வி பிரகாஷ் நேரடித் தொடர்பில்செயலாற்றுகிறார்கள்.
கல்வியாளர்கள் சங்கமம்
அமெரிக்கா டல்லாஸின் 'நம்பிக்கை விழுதுகள்' அமைப்பு, பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தின் இரு கிராமங்களைத் தத்தெடுத்து, வேண்டிய நிவாரண நிதிகள் அளித்து கைகொடுக்கும் பணியை,இங்குள்ள தன்னார்வலர்கள் குழுக்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது. இதனை 'கல்வியாளர்கள் சங்கமம்' பொறுப்பேற்றுக் கொண்டு,பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று செயலாற்றி வருகிறது.
தான் பிறந்ததிற்கு, இப்பூமிக்கு நாம் என்ன செய்தோம் எனப் பின்னால் எண்ணிக்கொள்ள, இந்நாளில், இன்றே, இப்பொழுதே நம் பணியாற்ற மனம் இறங்குவது நம் கடமையே ஆகும்.
உள்நாடு,வெளிநாடு என நல்லுள்ளங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல் படும் அத்தனை இளைஞர்களுக்கும்,பொறுப்பாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் ! படிக்கும் அனைவரும் இன்றே தன்னார்வலராக இணையுங்கள்.
நண்பர்களே, தன்னார்வலர் என்பது ஒரு தனிப் பணி அல்ல. சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டாலே நீங்களும் தன்னார்வலரே !
மனிதம் வாழ்கிறது, வாழ வைக்கிறது ....
ReplyDelete