பத்து
நாட்கள் இடைவெளிக்கு பின், வரும், 4ம் தேதி முதல், சென்னை உள்ளிட்ட
வடகடலோர மாவட்டங்களில், கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு
மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, நவ., 1ல்
துவங்கியது.
முதலில், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர
மாவட்டங்களிலும், பின், டெல்டா மாவட்டங்களிலும், தொடர்ந்து, தென்
மாவட்டங்களிலும் மழை கொட்டியது.இதையடுத்து, 'கஜா' புயல் உருவாகி, நவ.,
16ல், நாகை மாவட்டத்தில் கரையை கடந்தது. இந்த புயல், தமிழக டெல்டா
மாவட்டங்களுக்கு, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. புயல் தாக்கிய
பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.அதேநேரம்,
வடகிழக்கு பருவ மழையின் தீவிரமும் குறைந்தது. நவ., 23 முதல், பெரும்பாலான
இடங்களில் மழை இல்லை. நேற்று முன்தினம் முதல், தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில், மீண்டும் மழை துவங்கியது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி,
24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கும்ப கோணத்தில், 8 செ.மீ.,
மழை பெய்துள்ளது.இதற்கிடையில், வடக்கு கடலோர மாவட்டத்தினர், மழையை பெரிதும்
எதிர்பார்த்துள்ளனர். வரும் கோடை காலத்தை சமாளிக்க, நீர்நிலைகளில் பருவமழை
வாயிலாகவே, நீரை சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், மழையை
எதிர்பார்த்து, மக்கள் காத்துள்ளனர்.இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு
மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று,
வரும், 3ம் தேதி முதல், மீண்டும் வலுப்பெறும் என, இந்திய வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. அதனால், 4ம் தேதி முதல், தமிழகத்தின் பெரும்பாலான
மாவட்டங்களில், பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில்,
கனமழை பெய்யலாம். எனவே, தமிழகம் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு, டிச., 4ம்
தேதியில், 11 செ.மீ., வரை மழை பெய்வதற்கான, 'மஞ்சள் அலர்ட்'
விடப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...