தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் அறிவியலறிஞர் விருது பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலத்தில் 29 தமிழக அறிவியலறிஞர்களுக்கான விருதுகளையும், சான்றிதழ்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் மூலமாக, தமிழக அறிவியலறிஞர் விருது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விருதுகள், வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
மூன்று ஆண்டுக்கான விருதுகள்: கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அறிவியலறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை அளித்தார்.
அதன்படி, எஸ். வின்சன்ட் (உயிரியல்), இ. முருகன் (வேதியியல்), ஆர். இராஜேந்திரன் (சுற்றுச்சூழல் அறிவியல்),
ஜி. வைஸ்லின் ஜிஜி (பொறியியல் தொழில்நுட்பவியல்), வி. ரேணுகா தேவி (கணிதவியல்), எஸ். குமரவேல் மற்றும் கே. நாராயணசாமி (மருத்துவவியல்), ஆர். சத்தியமூர்த்தி (இயற்பியல்), எம். செல்வம் (சமூகவியல்), ஏ.வி. ஓம்பிரகாஷ் (கால்நடையியல்) ஆகியோருக்கும்; 2016-ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். நக்கீரன் (வேளாண்மையியல்), என். மதிவாணன் (உயிரியல்), ஆர். ரமேஷ் (வேதியியல்), எஸ். அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), எஸ். கண்மணி (பொறியியல் தொழில்நுட்பவியல்), ஆர். உதயகுமார் (கணிதவியல்), எஸ். வெற்றிவேல் செழியன் (மருத்துவவியல்), ஆர். ஜெயவேல் (இயற்பியல்), ஜி. ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோருக்கும்; 2017-ஆம்
ஆண்டுக்கான தமிழக அறிவியலறிஞர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட எம். ரவீந்திரன் (வேளாண்மையியல்), எம். மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), எஸ். கருப்புச்சாமி (வேதியியல்), எஸ். வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), பி. சிவகுமார் (பொறியியல் தொழில்நுட்பவியல்), என். அன்பழகன் (கணிதவியல்), ஆர். லட்சுமி நரசிம்மன் (மருத்துவவியல்), கே. ஜெகந்நாதன் (இயற்பியல்), எஸ். கெளசல்யா (சமூகவியல்), ஏ.கே. திருவேங்கடன் (கால்நடையியல்) ஆகியோருக்கும் என மொத்தம் 29 அறிவியலாளர்களுக்கு, தமிழக அறிவியலறிஞர் விருதுகளையும், விருதுக்கான தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகள், பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்களையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பிஅன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...