சுற்றுச்சூழலை
பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை
(செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு
தடை விதிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஜனவரி 1-ந் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக” அறிவித்தார். இதற்கான அரசாணை ஜூலை 16-ந் தேதி வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையில், “பால் மற்றும் பால் பொருட் களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு உத்தரவின் அடிப்படையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் ‘பேக்’ செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு புத்தாண்டு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வர இருக்கிறது. எனவே இனி கடைகளில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு தரமாட்டார்கள். பொதுமக்களே வீட்டில் இருந்து மறக்காமல் துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமை ஆகும். பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ் டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்கும்போது, கடைக்காரர்களும் அவற்றை வாங்கி வைக்க மாட்டார்கள். தேவை குறையும்போது பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களும் அதை தயாரிப்பதை குறைத்துக்கொள்ளும். இதுபோன்ற நிலையால், பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை விரைவில் உருவாக்க முடியும்.
அரசின் தடை உத்தரவை மீறி, கடைக்காரர்கள் பிளாஸ் டிக் பை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் மீதும் இந்த நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் மண்டல மற்றும் வார்டு வாரியாக சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பார்கள். முதற்கட்டமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் இருந்து அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகே தண்டனை விவரங்கள் தெரியவரும்.
இது தொடர்பாக, பிளாஸ் டிக் ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஒருங்கிணையாளர்களில் ஒருவரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
அரசு அறிவித்துள்ளபடி, தமிழகத்தில் 1-ந் தேதி (நாளை) முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட இருக்கிறது. தடுக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சிகளில் மண்டல வாரியாகவும், நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஒரு பகுதிக்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 1-ந் தேதி முதல் தீவிர ஆய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆய்வின்போது அரசு அறிவித்த மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, வியாபாரம் செய்தாலோ அல்லது அதில் உணவு பொருட்களை கட்டித்தருவது தெரிந்தாலோ அவர்களை இந்த குழுவினர் உடனடியாக மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்துவார்கள். ஆஜர்படுத்தப்படும் நபர்கள் வியாபாரிகளாகவோ, தொழிலாளர்களாகவோ, மக்களாகவோ யாராக இருந்தாலும் அரசின் உத்தரவை மீறியதற்காக அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று (திங்கட் கிழமை) மாலை வரை இந்த பொருட்களை எடுத்துச் சென்று வழங்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, சேமித்து வைத்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவற்றை பறிமுதல் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மண்டல அளவில், மண்டல அலுவலர், செயற்பொறியாளர், மண்டல சுகாதார அலுவலர், உதவி வருவாய் அலுவலர், வட்டாட்சியர், உதவி காவல் ஆணையாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோட்ட அளவில், உதவி செயற்பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் வரி வசூலிப்பவர் ஆகியோரை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
திருமணம் முடிந்து செல்லும் பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து சீதனம் வழங்கும் முறை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களும் இந்த சீதனத்தில் அடங்கியிருக்கும். 1990-ம் ஆண்டுகளுக்கு முன்னால், தாய் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சீதனப் பொருட்களே வீட்டில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தது.
அதன்பின்னர், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, தாய் வீட்டில் இருந்து வந்த சில்வர், அலுமினிய, வெண்கல பாத்திரங்கள் ஒவ்வொன்றாக பரண் மேல் சென்றுவிட்டது. பல வீடுகளில் இன்னும் பாத்திரங்களை மூட்டையாக கட்டி வைத்திருப்பதை காண முடியும். தற்போது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பரண் மேல் கிடந்த பாத்திரங்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. இனி.. வீடுகளில், தூக்கு, வாளி, அண்டா, டம்ளர் போன்றவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. பலர் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே தூசு படிந்த பாத்திரங்களை எடுத்து, தண்ணீரில் கழுவி பயன்பாட்டுக்கு தயார்படுத்திவிட்டதையும் காண முடிகிறது.
தாய் வீட்டில் இருந்து கொண்டு வந்த சீதனப் பொருட்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகாவது பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று பல பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கான நொறுக்குத் தீனிகள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் இடம்பெற இல்லை. இதற்கு, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் 2022-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில், 2019-ம் ஆண்டு தொடக்கம் (நாளை) முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் அதிரடி நடவடிக்கையை பொறுத்து, பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அது வெற்றி பெறாது. கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுக்கிறார்களே என்று பொதுமக்கள் வாங்கி வந்தால், பிளாஸ்டிக் பை என்றைக்கும் ஒழியாது. அதே நேரத்தில், எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு, பொதுமக்களே பிளாஸ்டிக் பைகளை வெறுத்து ஒதுக்கி துணிப் பைகளுக்கு மாறினால், மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் என்ணும் அரக்கனை மண்ணை விட்டு ஒழிப்பது நிச்சயம் சாத்தியமாகும். எந்தவொரு பொருளும் விற்பனையானால் தான், அதன் உற்பத்தியும் இருக்கும். விற்பனை இல்லாதபோது உற்பத்தி குறைந்து அது தானாகவே முடங்கிவிடும்.
#மஞ்சபைRETURN
ReplyDelete