தமிழகம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள்
கண்காணிப்பு பணியில் 6 ஆயிரம் பணியாளர்கள்
சென்னை: குரூப் 2 தேர்வு 11ம் தேதி நடைபெறுகிறது. 1,199 பதவிக்கு 6.26
லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) செயலாளர்
நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை
பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி தலைமை அலுவலகத்தில் நேற்று
நிருபர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் குரூப் 2ல் காலியாக உள்ள 1,199 காலி
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.இத்தேர்வுக்கு 6
லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெண்கள் 3
லட்சத்து 54 ஆயிரத்து 136 பேரும், ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 357
பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் அடங்குவர். இதில் பொது அறிவு
மற்றும் தமிழ் தேர்வில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 694 பேரும், பொது அறிவு
ஆங்கில தேர்வை 1 லட்சத்து 45 ஆயிரத்து 809 பேரும் எழுதுகின்றனர்.
இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு வருகிற 11ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக
தமிழகம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில்
மட்டும் 248 அமையங்கள் அமைக்கப்பட உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 6
ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள்
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்காக தேர்வாணையத்திற்கு நேரில்
வரும் நடைமுறை இருந்துவந்தது. இதனால் தமிழ்நாட்டில் கடைகோடியில் இருக்கும்
விண்ணப்பதாரர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் நேரில்
வரவேண்டிய நிலை இருந்தது. இதனால், சுமார் 2 ஆயிரம் அளவிற்கு பயணச்செலவு
ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில் இணைய வழியிலேயே அவர்கள் தங்கள்
இருப்பிடங்களுகு அருகில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை
பதிவேற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தவிர ஒரு நாளில்
100 தேர்வர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்பட்டு வந்தது. அண்மையில் நடைபெற்ற உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான
தேர்வுக்கு ஒரே நாளில் 800 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை அன்றைக்கே வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு நடைபெற்ற நாளில் இருந்து 67 நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்பட்டுள்ளது. தேர்வு அறிவுப்புகளை பொறுத்துவரை கடந்த 5 ஆண்டுகளில்
இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் 25 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு
இறுதிக்குள் மேலும் பல்வேறு பதவிகளுக்கு 20 அறிவிப்புகள் வெளியிடப்பட
உள்ளது.தேர்வாணைய வரலாற்றிலேயே நடப்பாண்டில் 17
ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு
துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். செய்யப்படவும் உள்ளனர். 2017ம்
ஆண்டிற்கான குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு விடை தாள்கள் திருத்தும் பணி
அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள்
வெளியிட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் காலங்களில்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களில் முதல்நிலை தேர்வும்,
அடுத்த 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், அதை தொடர்ந்து 2 மாதங்களில்
முதன்மை எழுத்து தேர்வும், அதன்பிறகு 3 மாதங்களில் முடிவுகளும்
வெளியிடப்படும். தொடர்ந்து 15 நாட்களில் நேர்முக தேர்வு நடத்தி 10
மாதங்களில் இறுதி முடிவு வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை
தேர்வாணையம் எடுத்து வருகிறது. தேர்வர்கள் தேர்வு குறித்து வரும் தவறான
செய்திகளையோ, வதந்திகளையோ இடைத்தரகர்களையோ நம்ப வேண்டாம். மேலும்,
விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலேயோ அல்லது contacttnpsc@gmail.com என்ற
மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள
தேர்வுக்கான கால அட்டவனை வருகிற ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
2016ம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு டி.என்.பி.எஸ்.சி முழு
ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இந்த புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி
பணியாளர்கள் 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ்
விசாரணைக்கு பிறகு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் வினா தாள்கள்
தமிழ், ஆங்கிலத்தில் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். தற்போது
பொலிட்டிக்கல் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் ஆங்கிலத்தில் கேள்வி
கேட்கப்பட்டிருந்தது. மற்ற எந்த தேர்வுக்கும் ஆங்கிலத்தில் கேள்வி
கேட்கப்படவில்லை. கேள்வி வடிவமைப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தான்
பொலிடிக்கல் சயின்சில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்ட நிலை ஏற்பட்டது.
இது விரைவில் தீர்க்கப்படும். இவ்வாறு கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...