அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை நாட்களை
கணக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது அதைப் பள்ளி கல்வித்துறை மாற்ற அமைக்க வேண்டும் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது .
தமிழ்நாடு அரசில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 31,393 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 6,597 அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளும் என 37,990 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகளின் வேலை நாள் என்பது கல்வி ஆண்டின் அடிப்படையில் பள்ளி தொடங்கும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை கணக்கிடப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் ஆண்டு தொடங்கும் ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இதனால் பள்ளி வேலை நாட்களை நிறைவு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை ஒரே நடைமுறைக்கு மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது. "அரசுப் பள்ளிகள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 210 நாட்கள் பணி நாட்களாகக் கருதப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில ஆண்டைக் கணக்கில் கொண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 210 நாட்கள் பணி நாட்களாகக் கருதப்படுகிறது. ஆனால் இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் 210 நாட்கள் ஈடுசெய்ய முடிவதில்லை .அவ்வாறு வேலை நாட்களில் முழுமையடையாத பள்ளிகளுக்கு கற்பித்தல் மானியம் அனுமதிப்பதில் கல்வி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது தேவையற்ற சட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
ஜனவரி முதல் டிசம்பர் வரை வேலை நாள் என்பது பல்வேறு நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்குக் கல்வி ஆண்டு என்பது ஜூன் முதல் ஏப்ரல் வரை இருக்கும்பொழுது கற்பித்தல் நாட்கள் மட்டும் ஜனவரி முதல் டிசம்பர் வரை என்பது முரண்பட்ட நடைமுறையாகும். இவ்வாறு நடைமுறைப்படுத்தியதற்கு முறையான விதிகளும் கல்வி துறையில் இல்லை. எனவே அரசுப் பள்ளிகளை போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆண்டு வேலை நாட்களை மாற்றி அமைக்க வேண்டும். கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் முறை எல்லாம் ஒரே மாதிரியாக உள்ள நிலையில் வேலை நாளில் மட்டும் மாறுபட்ட இருப்பது ஏற்புடையதில்லை. எனவே உரியத் திருத்தம் செய்து ஆணை வெளியிட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Very useful learning more
ReplyDelete