ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம்
ஒத்திவைத்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2017 -ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வில் 197 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சூரியம், ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகிய 4 பேர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர். இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் பிரபாவதி, இந்த முறைகேட்டில் முன்ஜாமீன் பெற்ற 4 பேருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. எனவே, இவர்களை போலீஸ் காவலில் விசாரித்தால்தான் உண்மை நிலை வெளியே வரும். எனவே, 4 பேருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அப்போது சுப்பிரமணியம் உள்ளிட்ட 4 பேர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனகராஜ், "இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள 4 பேரும் உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையின்படி விசாரணை அதிகாரி முன் 8 வாரங்கள் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் சாட்சிகள் எதையும் கலைக்கவில்லை, முன் ஜாமீன் நிபந்தனைகளையும் மீறவில்லை. எனவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கூடாது' என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
இதேபோன்று, இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...