பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண
மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிகவளாகங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: “வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்தவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களில் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்குறிப்பிட்ட இடங்களின் தரைப்பகுதி, இருக்கைகள், சமையலறை, குளியலறை, கழிவறைகள் கை கழுவும் இடம் மற்றும் கை கழுவும் பகுதியில் உள்ள குழாய்கள் போன்ற இடங்களில் லைசால் அல்லது ஹைப்போ குளோரைடு திரவம் அல்லது சர்ஜிகல் ஸ்பிரிட் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், தங்கள் நிறுவனத்திற்குட்பட்ட பகுதிகளில் முதிர் கொசுக்களை அழித்திடும் வகையில் புகைப்பரப்பும் இயந்திரங்களை சொந்தமாக கொள்முதல் செய்து அவற்றின் மூலம் வாரம் ஒருமுறை புகை மருந்து அடித்தல் வேண்டும். திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திட வேண்டும். நிகழ்ச்சி அல்லது வளாகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் குறித்த விளம்பர பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். குறிப்பாக திரையரங்குகளில் விளம்பர காட்சி நேரத்தின் போது பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பான படக்காட்சிகள் தவறாமல் ஒளிபரப்பு செய்திட வேண்டும்.
திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைபிடித்து பருவமழை காலங்களில் பொதுமக்களை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்திட தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Source: தி இந்து
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...