புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன்
திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய
முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் டிசம்பர் 4ம் தேதி ஆசிரியர்கள்- அரசு
ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த ஆண்டு
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அரசு ஊழியர்கள்,பணியாளர்கள்
சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் மீண்டும் ஜாக்டோ-ஜியோவில் இணைவது
தொடர்பாக கடந்த வாரம் சென்னையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் ஒன்றாக
இணைந்து(ஜாக்டோ-ஜியோ) டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளன. இந்நிலையில், அந்த
போராட்டத்தில் பங்கேற்பது குறித்து சில சங்கங்கள் இன்னும் முடிவு
எடுக்கவில்லை. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தற்போது அந்த போராட்டத்தில்
பங்கேற்கவில்லை என்று அறிவி–்த்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்
நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில
நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கஜா புயலால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை தருவதாக
அறிவித்ததை அடுத்து, அதை பிடித்தம் செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்க
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின்
வாழ்வாதாரப் பிரச்னையான புதிய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட
கோரிக்கைகளுக்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கஜா புயல்
பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம்
நடத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் நிவாரணப் பொருட்கள்
கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின்
நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளது.
Super
ReplyDelete