நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு
வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.
* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.
* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.
* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...