சிறப்பாசிரியர் தேர்வில் விதவைகள் மற்றும் முன்னாள்
ராணுவத்தினருக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அத்தகைய காலஅவகாசம் தராமல் ஆசிரியர் தேர்வு வாரியம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான தற்காலிக இறுதி தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது.
அதில், பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் ஒதுக்கீடு (Reserved) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னையில் நடந்த குழந்தைகள் தினவிழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேறு மாநிலங்களில் படித்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது சார்-ஆட்சியரிடம் உரிய சான்றிதழைப் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்கள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு தையல், ஓவிய பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் பயின்ற தேர்வர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:-
டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது என்று அந்தத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டு எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.
விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் மட்டும் ஒதுக்கீடு என்ற பெயரில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதன்கீழ் தேர்வானோர் சான்றிதழை சமர்ப்பிக்க 4 வாரங்கள் காலஅவகாசம் அளித்துள்ளனர். இதே நடைமுறை ஓவியம், தையல் பாடத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் ஏன் பின்பற்றப்படவில்லை? உரிய கட் -ஆப் மதிப்பெண் எடுத்தவர்களை இதுபோன்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் வைத்துவிட்டு அவர்களிடம் உரிய சான்றிதழை தற்போது கேட்டுப் பெற்றிருக்கலாமே, இதை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்யவில்லை? சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன.
எங்களுக்கும் இதுபோன்று கால அவகாசம் அளித்திருந்தால், தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்க இயலாது என்று சொல்லி அரசு தேர்வுத்துறை அளித்த சான்றிதழையோ அல்லது ஏதேனும் தனியார் பயிற்சி மையத்துக்குச் சென்று படித்தவர்கள் அங்கிருந்து பெறப்பட்ட சான்றிதழையோ அல்லது சுயமாக படித்தவர்கள் அதற்கு சுயஉறுதிமொழி சான்றிதழையோ சமர்ப்பித்திருப்போம்.
எனவே, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் போல் எங்களுக்கும் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...