சென்னையில் தமிழக அரசுடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், பேச்சுவார்த்தை நடத்திய அரசு தரப்பு தங்களது கோரிக்கை குறித்து எவ்வித உறுதிமொழியும் தரவில்லை.
நீங்கள் கூறிய விவரங்களை முதல்வரிடம் சொல்கிறோம் என்று மட்டுமே கூறினர். முதல்வரிடத்திலே கூறிவிட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களிடம் தெரிவிக்கிறேன் என்று கூட கூறவில்லை. முதல்வர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை. ஆகவே நாளைக்குள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கோ, அல்லது அரசு தரப்பிலிருந்து ஏதேனும் தகவல் தெரிவிக்கப்படாவிட்டால் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நாளையே கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
அரசு தரப்பு எதுவுமே சொல்லவில்லையெனில் திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் என்ற கட்டத்திற்கு தான் இவ்விவகாரம் செல்லும் என எச்சரித்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பளம் தொடர்பான பிரச்னைகள் மீது கடந்த 7 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக போராடி வந்த இவர்கள், ஒரே அமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்ற ஒருங்கிணைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இந்த அமைப்பின் போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தது. இதையடுத்து சிலர் நீதிமன்றம் சென்றனர். வழக்கு விசாரணையின் போது, ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரையை குறிப்பிட்ட காலத்தில் வெளியிடுவதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனாலும், தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையை அளிக்காமல் இழுத்தது.
இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்தனர். இதை முடக்க அரசு தரப்பில் பல முயற்சிகள் செய்து வருகிறது. போராட்டம் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது சாத்தியமா? என்று விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
மேலும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், என்ஜிஓ, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அழைத்து பேசினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த 4 சங்கங்களும், டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
ஆனால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வருகிற 4ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவுடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்தது. இவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு நேற்று அழைப்பு விடுத்தது.
அரசின் அழைப்பை ஏற்று, இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 4.40 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததுள்ளது. அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவித்த ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நாளை கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாக்டோ ஜியோ கூடுதலாக எந்த சலுகை யும் கோரவில்லையே அரசு ஊழியர் சிலருக்கு மட்டும் கிடைக்கும் ஊதியம்,ஒய்வூதியம் உள்ளிட்ட ஏற்கனவே உள்ளதை தானே எல்லோருக்கும் பாரபட்சமில்லாமல் முரண்பாடு இல்லாமல் நடைமுறை படுத்த சொல்கிறார்கள்
ReplyDeletePlease amend old pension
ReplyDelete