முனைவர் மணி.கணேசன்
அண்மைக்காலமாக ஆண்டின்
இறுதிப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்
பருவமழைக் காரணமாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக உருவெடுத்து
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினைச் சீர்குலைப்பது வாடிக்கையாக உள்ளது. சற்றுப் பெய்யும் கனமழைக்கு ஊரே வெள்ளக் காடாகக் காட்சியளிக்கும் கொடுமையினை என்னவென்பது? மாமழையைப் போற்றுவதும் பெருக்கெடுத்தோடும் வெள்ளப் பெருக்கை வரவேற்பதும் கொண்டாடிக் களிப்பதும் தமிழ்ச் சமூகத்தின் பெருவழக்காக இருந்து வந்துள்ளது.
இன்று இத்தகைய சூழல் மாறிவரும் போக்குகள் மலிந்து காணப்படுகின்றன. மழையை வெறுத்தொதுக்கும் மனநிலையில் மனிதர்கள் இருக்கின்றனர் என்பது மிகையில்லை. மழைநீர்ப் பெருக்கை அச்சம் மேலோங்க அணுகும் வாழ்வியல் சூழல்தான் இங்குள்ளது. ஆறுகளிலும் ஏரிகளிலும் குளங்களிலும் குட்டைகளிலும் நீந்திக் குளிக்கும் நடைமுறைகள் தற்காலத்தில் ஒழிந்துவிட்டன. வாய்ப்புள்ளவர்கள்கூட குழாய்களிலும் தேக்கிவைக்கப்பட்ட பாத்திரங்களின் மூலம் பகுதித் திறந்தவெளிகளிலும் அவசரக் குளியல் மேற்கொள்வதையே வழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஆழ்குழாய் நீரும் காசு கொடுத்துப் பெறும் குடிநீர் புட்டிகளும் மனித வாழ்க்கைக்குரிய நீர்த் தேவைகளையும் பயன்பாடுகளையும் நிறைவு செய்திடுமென்று முழுதாக நம்பிடும் அவலநிலையே உள்ளது.
அரசு நிர்வாகத்தின் நீர் மேலாண்மைக் குறித்த அக்கறையின்மையும் அலட்சியப் போக்குகளும் நீர்வழித் தடத்தையும் ஆதார சேமிப்பு இடங்களையும் தனிமனித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கத் தவறிவிட்டன. இதன் காரணமாகக் கொட்டிய மழைநீர் உரிய வழிகளில்
சேகரமாக இயலாமல் ஆங்காங்கே தேங்கிப் பாதிப்பைத் தோற்றுவிக்கிறது. மழைநீர் உயிர்நீர் எனும் முத்திரை வாக்கியத்தை மனனம் செய்ய மட்டுமே மனித மனம் ஒப்புக் கொள்கிறது. மேலும், மரங்களை சூறையாடிய மனிதச் சமூகம் தொட்டிச் செடிகளைக் கண்டு பரவசமடைந்து நிம்மதியடைகின்றது. அதனாலேயே தம் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதுடன் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் பெருமழையை நாகரிக சமூகம் முற்றிலும் நிராகரிக்கும் அவலநிலை இங்குள்ளது.
கனமழையால் பாதிப்படையாதோர் மிகச் சிலரே ஆவர். குறிப்பாக, நீர்நிலைகளை ஒட்டியும் புறநகர்களில் வீடுகட்டியும் வசிப்போருக்கு மழைக்காலம் பேரிடர் காலமாக ஆகிவிட்டது. மீனவர்களின் துயரப்பாடுகள் சொல்லவொணாதவையாக இருக்கின்றன.
இத்தகையோரின் பதட்டத்திற்கு திடீரென
சூழும் வெள்ளப் பாதிப்புகள் அடிப்படைக் காரணமாக அமைந்திட்டாலும் அதன்பின் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கைப்பாடு மற்றும் வயிற்றுப்பாடு பிரச்சினைகள் தாம் அவர்களிடையே பூதாகரமாக இருக்கின்றன. இந்த மனித ஆக்கச் செயற்கைப் பேரிடர்கள் தாம் அப்பாவிப் பொதுமக்களைப் பெரிதாக அச்சுறுத்தி வருகின்றன. பகல் கொள்ளையடிக்கத் துடிக்கும் பெரு, சிறு மற்றும் குறு வியாபாரத்திற்கு கொஞ்சம்கூட நெஞ்சில் ஈரமிருப்பதில்லை. எல்லாம் இரட்டிப்பு விலைதான். இல்லையேல் அதற்கும் மேலேதான்.
அத்தகையோரிடம் கொஞ்சம்
நியாயத்தைக் கோரினாலும் தம்மிடம் அபகரிப்பு செய்யப்பட்ட அநியாயம் தான் பதிலாக நம்மிடம் முன்வைக்கப்படும். வணிகம் எனப்படுவது எத்தகைய அபாயகரமான கொடுங்கோன்மை மிக்கது என்பது நடுத்தெருவில் நமக்குப் புரியவரும். வாழத்தானே வாழ்க்கை! அந்த நப்பாசையில் நாதியின்றித் தவிக்கும் பொதுமக்கள் வயிறெரிந்து மறுபேச்சு பேசாமல் தம்மிடம் இருக்கும் எஞ்சிய பணத்தைப் பறிகொடுத்த வண்ணம் தமக்குரிய அத்தியாவசிய பொருள்களைப் பெற முனைவர்.
மளிகைப்
பொருள்கள், காய்கறிகள், பால் பொருள்கள் முதலான இன்றியமையாத அனைத்தும் அநியாய விலைக்கே விற்கப்படும். எந்தப் பொருள்களும் உரிய, உகந்த விலைகளில் கிடைக்காது. அதற்கே மணிக்கணக்கில் கால்கடுக்கப் பரிதவித்தும் பதைபதைத்தும் நிற்க வேண்டி வரும். மனிதாபிமானம் என்பது அந்த ஈரப்பொழுதுகளில் உலர்ந்து காய்ந்துக் காணப்படும். இத்தகைய மனிதாபிமானமற்ற நோக்கும் போக்கும் களையப்பட வேண்டும்.
ஜப்பான்
உள்ளிட்ட நாடுகளில் காணப்படுவதைப் போல், நம் நாட்டிலும் இயற்கைப் பேரிடர் காலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தம்மால் இயன்ற அளவிற்கு வழக்கத்திற்கு மாறாக உதவிகளைச் செய்ய முன்வருதல் தலையாயத் தேசக் கடமையாகும்.
அரசும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகப் பல்வேறு தற்காலிகக் கூட்டுறவு பண்டக சாலைகளை நிறுவி குறைந்த விலையில் தரமான பொருள்களை வழங்கிப் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அவசர அவசியமாகும். எரிகிற வீட்டில் பிடுங்குகின்ற வரை ஆதாயம் என்று எண்ணித் தீவிரமாகச் செயற்படும் போக்கினைக் கைவிடுதல் என்பது இன்றியமையாதது. கடந்த காலங்களில் நிஷா மற்றும் வார்தா புயல்களின்போது நடந்தேறிய எல்லாவிதமான கேலிக்கூத்துகளுக்கும் கிஞ்சித்தும் இடமளிக்காமல் குறுகிய எண்ணங்களைப் புறந்தள்ள வேண்டிய தருணமிது.
அதுபோல், மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் கணக்கெடுப்பை இயன்றவரை சரியாக அளவிட்டு உரிய நிவாரணத்
தொகை மற்றும் பொருள்களை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, இடைத் தரகர்களோ அவற்றைச் சுரண்டி எஞ்சியவற்றை ஏனோதானோவென்று வழங்கிடும் நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும். பயனாளிகளின் பட்டியலையும் விருப்பு வெறுப்பின்றி சிறந்த முறையில் தயார் செய்வது இன்றியமையாதது. நிவாரணத் தொகையினைப் பயனாளிகளின் விருப்பத்திற்கு இணங்க அவரவர் வங்கிக் கணக்கில் சேர்ப்பிப்புச் செய்வதையும் வழக்காக்கிக் கொள்ளலாம்.
இத்தகைய
மனிதாபிமான மிக்க நிகழ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கடும் தண்டனைகள் வழங்கிடவும் ஏதுவாகப் புதிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதும் மிகுந்த பலனளிக்கும். மனிதரை மனிதர் நோகச் செய்வதிலிருந்து விடுபட்டு, சக மனிதனின் கண்ணீரைத் துடைக்கப் பாடுபட்டால் மட்டுமே மானுடம் வெல்லும்!
முனைவர் மணி. கணேசன், ராஜீவ் காந்தி நகர்
மன்னார்குடி – 614001, திருவாரூர் மாவட்டம்
9442965431
mani_ganesan@ymail.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...