Cupcake, ஓரியோ, ஜெல்லி பீன்
போன்றவை ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். சரி அப்படியென்றால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ என அழைக்கப்படுபவை என்ன? என்பதுதான் பலருக்கும் குழப்பமாக இருந்திருக்கும். எளிமையாகச் சொல்லவேண்டுமானால் ஓரியோ, ஜெல்லி பீன் போன்றவை உணவுப்பொருட்கள் என்று எடுத்துக்கொண்டால் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ ஆகியவற்றை அவற்றின் சுவையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த சுவைகளில் இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று பார்ப்பதற்கு முன்பு எப்படி நம் மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு மென்பொருள் வந்துசேருகிறது என்பதைப் பார்ப்போம்.
கூகுள் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன்களின் Source Code-களை பொதுவெளியில் வெளியிடும். இவை Open source Project என்பதால் இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மொபைல் நிறுவனங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றத்திலும் வசதிகளிலும் மட்டும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து தங்கள் மொபைல்களில் அவற்றைச் செயல்படுத்தும். சாம்சங்கின் டச் விஸ், HTC-யின் சென்ஸ், ஒன்ப்ளஸ் ஆக்ஸிஜன்OS என மொபைல்களில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களின் UI மென்பொருட்கள் இப்படித்தான் தயாராகிறது. ஆனால் இப்படி மாற்றங்கள் செய்து வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பெர்ஃபார்மன்ஸ் குறையலாம், பாதுகாப்பில் பிரச்னைகள் வரலாம், அப்டேட்கள் உடனடியாக கிடைக்காது. சில சமயங்களில் தயாரிப்பு நிறுவனங்கள் தரும் UI-க்களே மோசமாக இருக்கும்.
இதனால் கூகுள் சில மாற்றங்களுடன் தங்களது ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன்களை வெளியிடத் தொடங்கியது. இவை என்னவென்று பார்ப்போம்.
ஸ்டாக் ஆண்ட்ராய்டு
மாற்றங்கள் எதுவுமே செய்யப்படாமல் கூகுள் எப்படி வெளியிடுகிறதோ அப்படியே இருப்பதுதான் ஸ்டாக் ஆண்ட்ராய்டு. இதில் இருக்கும் முக்கியமான நன்மையாக பார்க்கப்படுவது கூகுள் ஏதேனும் அப்டேட் வெளியிட்டாலோ, பாதுகாப்பு வசதிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்தாலோ இந்த மொபைல்களுக்கு உடனடியாக அவை கிடைத்துவிடும். மற்ற மொபைல்களில் வாங்கும்போதே தேவையில்லாத செயலிகள் சில இருக்கும், இவற்றை சில நேரங்களில் அன்இன்ஸ்டால் செய்யவும் முடியாது. நேரடியாக வருவதால் ஸ்டாக் ஆண்ட்ராய்டில் அப்படி ஒன்றுகூட இருக்க வாய்ப்பில்லை. நெக்சஸ் மற்றும் பிக்ஸல் மொபைல்கள் கூகுளிடம் இருந்து வருவதால் இந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டுதான் அவற்றில் இருக்கும். இதைத்தவிர வெகுசில மொபைல்கள் மட்டும் ஸ்டாக் ஆண்ட்ராய்டுடன் வரும். ஆனால் ஓரளவு நல்ல ஹார்ட்வேர் கொண்ட மொபைல்களில்தான் இது இலகுவாக இயங்கும். மற்ற போன்கள் இதில் இயங்கச் சற்று திணறும்.
ஆண்ட்ராய்டு ஒன்
2014-ல் அறிமுகமான இது ஆரம்பவிலை மொபைல்களுக்கும் இந்த கலப்படமில்லாத ஆண்ட்ராய்டு சேவையை வழங்கும் நோக்கில் கூகுளால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இன்று அதைத்தாண்டி மிட்-ரேன்ஜ் மொபைல்கள் வரை வளர்ந்துள்ளது ஆண்ட்ராய்டு ஒன். இதன்மூலம் பிரீமியம் மொபைல்கள் மட்டுமின்றி சாதாரண விலை மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்டு முழுமையாக கொண்டுசெல்ல வழிவகை செய்யப்பட்டது. இதிலும் அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும். ஸ்டாக் ஆண்ட்ராய்டுக்கும் இதற்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இது கூகுளின் 'ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட்'-டில் வராது. ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த ஆண்ட்ராய்டு ஒன் சேவை. இதிலும் தேவையில்லாத செயலிகள் மற்றும் தோற்ற மாற்றங்கள் பெரிதாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளும் கூகுள்.
ஆண்ட்ராய்டு கோ
இதுவும் ஆண்ட்ராய்டு ஒன் உருவாக்கப்பட்ட அதே நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான். எப்படி ஃபேஸ்புக் செயலுக்கு மாற்றாகக் குறைந்த அளவு டேட்டாவை செலவழிக்கும் ஃபேஸ்புக் லைட் செயலி இருக்கிறதோ அதே போன்றுதான் 'ஆண்ட்ராய்டு கோ'வும். குறைந்த விலை மொபைல்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இது 512 MB அல்லது 1 GB RAM-மிலும் எந்த ஒரு பிரச்னையுமின்றி இயங்கவல்லது. மேலும் கூகுள் செயலிகளின் லைட் வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு கோ மொபைல்களுக்கு கிடைக்கும். இவை 5 MB முதல் 10 MB தான் இருக்கும். ஆனால் முழு வசதிகளையும் இதில் எதிர்பார்க்கமுடியாது. ஸ்டோரேஜை முடிந்த அளவு சேமிப்பதே இதன் முக்கிய குறிக்கோள். இப்போது ஆண்ட்ராய்டு ஒன், மிட்-ரேன்ஜ் மொபைல்களின் மீது முழுவதுமாக தன் கவனத்தை திருப்பிவிட்டநிலையில் ஆண்ட்ராய்டு கோ முழுவதுமாக குறைந்த விலை மொபைல்களில் மட்டும் கவனம் செலுத்தும்.
இதில் எது பெஸ்ட் என்ற கேள்விக்கு சரியான பதிலே இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொபைல் வகைக்கேற்ப மாற்றியமைக்கப் பட்டிருக்கும். இதுதவிர வரும் மொபைல்களுடன் வரும் மற்ற ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் எல்லாம் அந்தந்த நிறுவனங்களால் Customize செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு OS-களே!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...