ஏற்கனவே
பயன்படுத்தப்படும் மொபைல் போன் இணைப்புக்கு, ஆதாருக்கு மாற்றாக புதிய
ஆதாரங்களைத் தருவது கட்டாயமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து
உள்ளது.'மொபைல் போன் இணைப்பு, வங்கிக் கணக்கு போன்றவற்றுக்கு ஆதார்
கட்டாயமில்லை' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், 'ஏற்கனவே மொபைல் போனுக்காக, ஆதார் இணைத்தவர்கள், தங்கள் அடையாளத்தை நிரூபிக்க, புதிய முகவரி மற்றும் அடையாள ஆதாரங்களை தராவிட்டால், அவர்களது மொபைல் இணைப்பு துண்டிக்கப்படும்' என, செய்திகள் வெளியாகின.இவ்வாறு, நாடு முழுவதும், 50 கோடி மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளதாக, செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், ஆதார் வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு துறை ஆகியவை இணைந்து, நேற்று ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளன; அதில் கூறப்பட்டுள்ளதாவது:மொபைல் போன் இணைப்புகள் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது, புதிய இணைப்புகளுக்கு மட்டும் தான். ஏற்கனவே உள்ள இணைப்புகளுக்கு இல்லை. ஏற்கனவே, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளரின் விபரங்களை அறிந்து கொள்ள, மின்னணு முறையில், ஆதாருடன் இணைக்கப்பட்ட தகவல்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது.
ஏற்கனவே பெறப்பட்ட ஆதார் விபரங்களை நீக்க வேண்டும் என, தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், ஆறு மாதங்களுக்கு மேல், ஆதார் மூலம் உறுதி செய்யும் தகவல்களை வைத்திருக்கக் கூடாது என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு மட்டுமே பொருந்தும். மொபைல் போன் நிறுவனங்களுக்கு அந்த உத்தரவு பொருந்தாது.மொபைல் இணைப்புகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட ஆதார் விபரங்களை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இணைப்பு பெற்றவர்கள், தங்கள் அடையாளத்தை நிரூபிக்க புதிய ஆதாரம் ஏதும் தரத் தேவையில்லை.அதே நேரத்தில், சுயவிருப்பத்தின் அடிப்படையில், ஆதார் விபரங்களுக்கு மாற்றாக, வேறு ஆதாரங்களை பொதுமக்கள் தாக்கல் செய்யலாம். அதனால், எந்த மொபைல் போன் இணைப்பும் துண்டிக்கப்படாது.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...