Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதியுடன்கூடிய கணினி மயம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்




வரும் ஆண்டில் அனைத்துப் பள்ளிகளும் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் முறையான வரைபட அனுமதி பெறாத தனியார் மெட்ரிக். மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிபந்தனையுடன் 2019-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஏற்கெனவே விருதுநகர், ஈரோடு, திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,440 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 308 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரச் சான்று வேலூரில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தனியார் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் தற்காலிக அங்கீகாரச் சான்றுகளை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில் சிறந்த கல்வியைத் தர பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு கட்டட வரைபட அங்கீகாரம் இல்லை என்றால் தேர்வு மையம் அமைத்தல், வாகன அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு தற்காலிக அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக அங்கீகாரச் சான்றை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்க எண்ணினோம். ஆனால், நீதிமன்றத்தின் தடையாணையால் ஓராண்டுக்கு மட்டுமே வழங்க முடிந்தது.
தனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் இடையே போட்டிகள் உண்டு. ஆனால், பொறாமை கிடையாது. தனியார் பள்ளிகள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் அதிவேகமாக செல்கின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் அந்த வேகம் குறைவுதான் என்றாலும், அதை ஈடு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி செய்யப்பட உள்ளன. மேலும், 1 முதல் 5-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு தலா 4 சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மாணவர்களின் விஞ்ஞான அறிவை வளர்க்க ரூ. 20 லட்சம் மதிப்பில் 622 பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் நவீன அறிவியல் ஆய்வகங்கள் டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும். வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. தற்போது வழக்கு முடிந்துவிட்டதை அடுத்து ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கே மடிக்கணினியும், சைக்கிள்களும் இலவசமாக வழங்கப்படும். மரங்கள் அழிவதைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் ஒப்புதலுடன் வரும் ஆண்டு முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் மூலம் தலா 5 மரங்கள் நட்டு பாதுகாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், மழைநீரை சேகரிக்க பள்ளிகளில் அதற்கான அமைப்புகளை ஏற்படுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக விழாவுக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அரக்கோணம் எம்.பி. அரி, மெட்ரிக். பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை
அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. மாறாக தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத 33 பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு குருஞ்செய்தி அனுப்பும் திட்டம்  நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது.
பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய முதல்கட்டமாக திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் 100 வாகனங்கள் தொண்டு  நிறுவன உதவியுடன் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, மார்ச் மாதத்துக்குள் ஆயிரம் வாகனங்களை வழங்க உள்ளோம்.
அனைத்து பள்ளிகளும் உறுதி தன்மையுடன் உள்ளது. மழைக் காலங்களில் பள்ளி  சுவரில் விரிசல் விழுமே தவிர மற்றபடி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார் அவர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive