காலாண்டு
தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில்,
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்கும் போராட்டத்தை
அறிவித்து உள்ளனர். இதனால், அரசு அலுவலகங்களில் பணிகளும், பள்ளிகளில்
வகுப்புகளும் பாதிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விடுப்பு : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான,
'ஜாக்டோ - ஜியோ'வின் கூட்டம், செப்., 16ல், சேலத்தில் நடந்தது. இந்த
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்கள், நாளை தற்செயல் விடுப்பு எடுக்கின்றனர். அதன் பின், வரும், 13ல்,
சேலத்தில், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளனர்.இதன் பின்னும், அரசு
தரப்பில் பேச்சு நடத்தாவிட்டால், நவ., 27 முதல், கோரிக்கைகள் நிறைவேறும்
வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.இது குறித்து, ஜாக்டோ -- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட்
கூறியதாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த
வேண்டும். ஆறாவது ஊதிய குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய, 21 மாத ஊதிய
நிலுவை தொகையை, தாமதமின்றி வழங்க வேண்டும்.மதிப்பூதியம் : ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், அங்கன்வாடி
ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு,
வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கான
மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு ஊதிய முறைகளை, நிரந்தர
காலமுறை ஊதியமாக, அரசு அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி,
தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால், நாளை அரசு அலுவலக
பணிகளும், அரசு பள்ளிகளில் வகுப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பள்ளிகளை பொறுத்தவரை, பகுதி நேர ஆசிரியர்களை வரவழைத்து, வகுப்புகளை நடத்த,
தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...