தனியார்
பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும், அடுக்கடுக்கான மாற்றங்களை
அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.செருப்புக்கு
பதில், ஷூ; கேமராவுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்பு; புதிய வகை சீருடை; முக
அடையாளத்தை வைத்து, வருகை பதிவு செய்யும், 'டிஜிட்டல்' கருவி; வீட்டு
பாடங்களை, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புவது போன்ற திட்டங்கள்,
நடைமுறைக்கு வருகின்றன.
புதிய பாட திட்டம்அரசு பள்ளிகளில், நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில், பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் ஈடுபட்டு உள்ளார்.அதன்படி, 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பாடத்திட்டம் மாற்றப்பட்டு, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துஉள்ளது. பொது தேர்வுகளில், மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுத்திய, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.பொது தேர்வுகளில், மொழி பாட வினாத்தாள் எண்ணிக்கையும், ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.இந்த திட்டங்களுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், இன்னும் பல மாற்றங்களை, பள்ளி கல்வித் துறை அமல்படுத்த உள்ளது.இதன்படி, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, இரண்டு விதமான புதிய சீருடைகள், அடுத்த ஆண்டு அமலுக்கு வருகின்றன. தனியார் பள்ளி சீருடைகளில் உள்ள வடிவம் மற்றும், 'டிசைன்' களை போல, கட்டம் போட்ட பல வண்ணங்கள் இணைந்த, சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.மாணவ - மாணவியருக்கு செருப்புக்கு பதில், ஷூ வழங்கவும், அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான கோப்புகள், முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளிகளில், மாணவர்களின் வருகையை பதிவு செய்ய, நவீன, 'டிஜிட்டல்' பதிவு திட்டமும் அமலாகிறது. மாணவர்களின் முக அடையாளத்தை பதிவு செய்து, தானாகவே வருகை பதிவு செய்யும் கருவி, பள்ளிகளில் பொருத்தப்படும்.இதற்கு முன்னோட்டம்ஆக, சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டிஜிட்டல் வருகை பதிவு கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குறுஞ்செய்தி : அனைத்து பள்ளிகளிலும், முக்கிய அறிவிப்புகள் மற்றும் வகுப்பு வாரியாக வீட்டு பாட விபரங்கள், பெற்றோரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளன.வகுப்பறைகளில், கேமராவுடன் கூடிய கணினி இணைக்கப்பட்ட, 'ஸ்மார்ட்' வகுப்பும், ரோபோட்டிக் பயிற்சிகளும் துவக்கப்படுகின்றன.தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கே, கையடக்க கணினி வழங்கி, 'ஆன்லைன்' வழியில் பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த மாற்றங்களுக்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், அடுத்த ஆண்டு, முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றும், பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில், தனியார் நிறுவனங்கள் உதவியுடன், பல புதிய திட்டங்களை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மத்திய அரசு அறிவித்துள்ள, 'அடல் டிங்கரிங்' ஆய்வகம், தனியார் அமைப்பின் பங்களிப்புடன், சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப் பட்டு உள்ளது.
ஆய்வகத்தை திறந்து வைத்து, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:அரசு பள்ளிகளில், தனியார் அமைப்புகள் உதவியுடன், ஆய்வகம் அமைக்கப்பட்டு, 'ரோபோட்டிக்' பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.மத்திய அரசு நிதியுதவிஉடன், 60 லட்சம் ரூபாய் செலவில், 672 பள்ளிகளில், 'அடல் டிங்கரிங்' ஆய்வகம் திறக்கப்படும். மேலும், பாட வகுப்புகள் இல்லாத இடைவேளை நேரங்களிலும், காலை, மாலை சிறப்பு வகுப்புகளிலும், ஆங்கிலம் படிக்கும் வகையில், 11.70 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி வழங்கப்படும். இதற்காக, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.தமிழக பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் அளவு, மற்ற மாநிலங்களை விட பெருமளவு குறைந்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, தகுதி தேர்வு தேதி, விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...