புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான அறிவியல்
கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி நேற்று துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல்வரின் கேள்விகளுக்கு
அசராமல் மழலை பேச்சில் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில
அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கி நாளை வரை நடக்கிறது. இதற்கான
துவக்க விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு
விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வமுடன்
பார்வையிட்டார். அப்போது, கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு
தொடக்கப்பள்ளி நித்தீஷ் (5ம் வகுப்பு) காட்சிக்கு வைத்திருந்த எளிதாக
கொண்டு செல்லக்கூடிய கைக்கழுவும் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து
முதல்வர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அசராமல் மழலை குரல்
நகைச்சுவையை தூண்டும் விதமாக அந்த மாணவர் பதில் அளித்து அசத்தினார். இதனால்
கண்காட்சியில் சிரிப்பலை எழுந்தது. காரைக்கால் தொடக்கப்பள்ளியை சேர்ந்த
ஒரு மாணவர் எளிதாக நிலநடுக்கும் கண்டறியும் கருவியை பார்வைக்கு
வைத்திருந்தார். அந்த மாணவரும் முதல்வரின் கேள்விக்கு டக்கு.. டக்கு...
என்று பதில் அளித்து பாராட்டை பெற்றார். இதேபோல், மற்றொரு அரசு
தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவர், வாகனங்களால் காற்று மாசுபடுவதை தடுக்கக்
கூடிய கருவியை உருவாக்கி இருந்தார். அந்த மாணவனும் முதல்வரே அசந்துபோகும்
வகையில் கருவின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார். இதனால்,
தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஒவ்வொரு படைப்பையும் முதல்வர் பொறுமையாக
பார்த்து கேட்டறிந்து சென்றார். இதில் டில்லி சிறப்பு பிரதிநிதி
ஜான்குமார், பள்ளி கல்வி இயக்குநர் ருத்ர கவுடு, இணை இயக்குநர் குப்புசாமி,
ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் மற்றும் பள்ளி முதல்வர்கள், துணை
முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம்
பகுதிகளிலிருந்து மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் படைப்புகள் -
98, ஆசிரியர்களின் படைப்புகள் - 29 என மொத்தம் 127 அறிவியல் படைப்புகள்
இடம் பெற்றுள்ளன.
இதனை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடவும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...