பள்ளி மாணவர்கள் அணிந்துவரும் உடைகளினால்,
அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வந்துவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதே
சீருடை. இந்த நடைமுறை அரசுப் பள்ளிகளில் மட்டுமல்லாது, தனியார்
பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது. அதேபோல, மதிப்பெண் அடிப்படையில்,
மாணவர்களின் திறனை அளவிடும் முறை குறித்தும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
அதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆயினும், மாணவர்களின்
கற்றல்திறனை ஆசிரியரும் பெற்றோரும் அறிந்துகொள்ள ஓர் அளவிடும் முறை
தேவைப்படுகிறது. செயல்வழிக் கற்றலில், கிரேடு முறையைப் பின்பற்றுகிறார்கள்.
ஆனபோதும், ஏ1 கிரேடு பெற்ற மாணவரைப் பார்த்து, கடைசி கிரேடு மாணவர்
ஏக்கம்கொள்வது தவிர்க்கமுடியாதது அல்லவா. அந்த ஏக்கம், அந்த மாணவரை
மற்றவர்களிடமிருந்து தனித்துவிடக் கூடாது. அதற்காக, புதிய முறையைக்
கையாள்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓர் ஆசிரியர்.
திண்டுக்கல், பாரதிபுரம், சௌராஷ்டிரா ஸ்ரீ வரதராஜா தொடக்கப் பள்ளியின்
ஆசிரியர், ஜெ.சுரேஷ் பாபு. ``நான் இந்தப் பள்ளியில் 9 ஆண்டுகளாகப்
பணியாற்றிவருகிறேன். வகுப்பறை என்பது, மாணவர்களும் பேசும்விதமான ஜனநாயகம்
நிறைந்து இருப்பதே சரியானது என நினைப்பவன். பாடங்களை உரையாடலாக நடத்தவும்
செய்வேன். மாணவர்களுக்குப் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வரும்பட்சத்தில்,
கொஞ்சமும் தயங்காமல் எழுந்து கேட்பார்கள். இந்தச் சூழல்தான்
கற்றுக்கொள்வதற்கு மட்டுமன்றி, கற்றுக்கொடுக்கவும் ஏற்றதாக இருக்கும்.
கிரேடு மதிப்பீடு - ஆசிரியர்
தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் செயல்வழிக் கற்றல் முறையில், தியரிக்கு 60
மதிப்பெண்; செயல்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு 40 மதிப்பெண் வழங்கப்படுகின்றன.
அவையும் கிரேடு முறையில்தான் அளிக்கப்படுகின்றன. A1 கிரேடு பெற்ற
மாணவர்களுக்கு, வகுப்பின் பிற மாணவர்கள் கைதட்டி வாழ்த்துகளைத்
தெரிவிப்பார்கள். ஆனால், A1 கிரேடு மாணவர்களைப் பாராட்டும் அதேநேரம், நன்கு
படித்தும் ஏதேனும் சூழலில் அடுத்தடுத்த கிரேடு பெற்ற மாணவர்களின் மனமும்
தொய்வடைந்துவிடக் கூடாது என முடிவெடுத்தேன். எங்கள் வகுப்பில் D கிரேடு
வாங்கிய மாணவர்கள் யாருமில்லை. C கிரேடு பெற்ற மாணவர்கள் சிலர் இருந்தனர்.
எனவே, அவர்கள் மூலம், A1 கிரேடு பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களைத் தரச்
சொன்னேன்" என்கிறார் சுரேஷ் பாபு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...