உத்தரப் பிரதேசத்தில், தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு நடைபெறும் பள்ளி வகுப்பறைகளில் டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று அந்த மாநிலத்தின் கல்வி வாரியத்தின் செயலர் நீனா ஸ்ரீவாஸ்த்தவா நேற்று (அக்-18)தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மிகப்பெரிய தேர்வு அமைப்பு முறையை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் தேர்வு நடைபெறும் இடங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தன. இதைத்தவிர தேர்வுகள் நடைபெறும் இடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்த பறக்கும் படைகளும் உருவாக்கப்பட்டு, அவை சோதனைகளை நடத்தி வந்தன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இம்மாநிலத்தில் தேர்வு நடைபெறும் வகுப்பு அறைகளில் முறைகேடுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. பிட் அடிப்பது, தேர்வைக் கண்காணிப்பவரே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்விகளுக்கான பதில்களை எழுதிக்கொடுப்பது மற்றும் சொல்லிக்கொடுப்பது உள்ளி்ட்ட எண்ணற்ற முறைகேடுகள் நடந்து வருகின்றன.
இதைத்தடுப்பதற்கு தேர்வு நடைபெறும் அறைகளில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.. ஆனாலும் கண்காணிப்பு கேமராக்களின் பார்வை படாத இடத்தில் ஆசிரியர்கள் நின்று கொண்டு மாணவர்களுக்கு பதில்களை உரத்த குரலில் படித்துக் காட்டுவது என்பது போன்ற முறைகேடுகள் நடந்து வந்தன. இதைத்தவிர மாஸ் காப்பியிங் எனப்படும் ஒட்டு மொத்த மாணவர்களும் காப்பி அடிப்பதும் கட்டுபடுத்த முடியாத அளவில் நடந்து வந்தது. இதனைத் தடுக்க தேர்வு நடைபெறும் அறைகளில் டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என அந்த மாநில கல்வி வாரியத்தின் செயலர் நீனா ஸ்ரீவாஸ்த்தவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று நீனா ஸ்ரீவாஸ்த்தவா பத்தரிகையாளர்களிடம் பேசியபோது வரும் 2019 முதல், உயர் நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி தேர்வுகளில் டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்களை தேர்வு நடைபெறும் பள்ளி அறைகளில் பொருத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆசிரியர்கள் இணைந்து கணிதத் தேர்வுகளில் கண்காணிப்பு கேமராக்களின் பார்வையில் படாமல் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது தெரிய வந்தது. எனவே இதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...