ஒரு பொருளையோ, மனிதர்களையோ பார்த்து
ஓவியமாக தீட்டுவது சாதாரணமான விஷயமல்ல... அது ஒரு அச்சுப்பிசகாமல் நகலெடுக்கும் அற்புதக்கலை. அந்த ஒரு கலையை தேங்காய் ஓடுகளில் தீட்டி நம்மை அசர வைக்கிறார் ஒரு ஆசிரியர்வாங்களேன்... அவரைப் பற்றி பார்க்கலாம்
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசியராக பணியாற்றி வருகிறார் சபரிநாதன் (34). இவர் கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட அளவில் சிறந்த ஓவிய நல்லாசிரியருக்கான விருதை பெற்றார்
2016ம் ஆண்டு சாக்பீசில் தேசத்தலைவர்கள் படத்தை ஓவியமாக வரைந்து அசத்தி உள்ளார். அவர் கூறியதாவது, ‘‘சிறு வயதில் காகிதங்களில் வெறும் கிறுக்கல்களில் ஆரம்பித்து, இன்று நான் ஓவிய ஆசிரியராக இருப்பதற்கு முதல் காரணம் எனது பெற்றோர் உமா மகேஸ்வரன் - சுமதி. அவர்கள்தான் எனக்கு முதல் குரு, ஆசிரியர். பள்ளிக்காலங்களில் வரைந்த பல ஓவியங்கள் எனக்கு பல பரிசுகளை பெற்று தந்தது
பின் கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியில் 5 ஆண்டு கால இளங்கலை பட்டய படிப்பில் சேர்ந்தேன். அங்கு பலவித ஓவியங்களை வரைவது குறித்து கற்று தேர்ந்தேன்
நான் வரைந்த, ஒரு பெண் எதையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற ஓவியம், மதுரை காந்தி மியூசியத்தில் இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு போட்டோ பியூஜி, ஸ்டெட்லர், வாட்டர் கலர், பென்சில் கலர், இயல் ஓவியம், கார்ட்டூன்ஸ், கலர் மிக்சிங் உள்ளிட்ட பலவகை ஓவியங்கள் வரை கற்றுக் கொடுத்துள்ளேன். ஒரு நாள் 18 சித்தர்களின் படத்தை ஓவியமாக வரைய முடிவு செய்தேன். அதுவும் தேங்காய் சிரட்டையில் வரைய எண்ணினேன். தேங்காய் எந்த வடிவத்தில் வருகிறதோ அதை அப்படியே எடுத்துக்கொண்டு, உட்புற பகுதியில் தேய்ப்புத்தாள் மூலம் சுத்தம் செய்தேன்
பின் ஸ்னோ ஒயிட் பெயிண்டை இரண்டு முறை அடித்து அரை மணி நேரம் காயவைத்தேன். அதன்பின் 6 பி பென்சிலால் அவுட்லைன் வரைந்து, அதன்பின் போஸ்டர் கலர் பயன்படுத்தி 18 சித்தர்களின் படங்களை ஓவியமாக வரைந்தேன்
18 சித்தர்கள் வெவ்வேறு வடிவங்களில் உருவ அமைப்பு கொண்டுள்ளதால், உருவங்களை வரையும்போது முகத்தோற்றம் மிக முக்கியம் என்பதால் அதிக நேரம் செலவாகிறது. இயற்கை காட்சிகளையும் வரைந்துள்ளேன்
இயற்கை காட்சிகள் வரைவதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் போதும். ஆனால் ஒரு சித்தரின் படம் வரைய சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகி விடும். இதனால் ஒரு நாளைக்கு 5 சித்தர்கள் படமும், இரண்டு இயற்கை காட்சிகள் படம் மட்டுமே ஓவியமாக வரைய முடிகிறது
மோனலிசா போன்ற ஓவியங்களை வரைய வேண்டும். ரவிவர்மா போல புகழ் பெற வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசை நிறைவேறும் வரை என் ஓவியப் பயணம் தொடரும்,’’ என்றார்
வாழ்த்துகள் சார் உங்கள் பணி சிறந்து விளங்கும். பயணம் தொடர வாழ்த்துகள்....
ReplyDelete