Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று உலக ஆசிரியர் நாள் - அக்டோபர் 5

World Teachers Day
- October 5
இந்தியாவில் ஆசிரியர் பயிற்சித் தகுதியுள்ள ஆசிரியர்களின் நிலை என்ன?

ஆண்டுதோறும் அக்டோபர் 5 அன்று கொண்டாடப்படும் உலக ஆசிரியர்கள் நாள்,  இந்த ஆண்டு  ‘‘கல்வி உரிமைக்கான அதாவது தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான உரிமை’’ என்பதில் கவனம் செலுத்துகிறது,. இதையொட்டி, யுனெஸ்கோ தலைமையகத்தில் அக்டோபர்  4 மற்றும் 5 நாட்களில்  பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர் நெரிசல் மிக்க வகுப்பறைகள், தரமான ஆசிரியர் பயிற்சி இல்லாமை, பணிக்காலத்தில்  ஆசிரியர் தொழில்சார் வளர்ச்சி இல்லாமை ஆகிய  காரணிகள் அனைத்தும் கற்றலுக்கான  எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கின்றன.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் தரமான கல்விக்கு அவசியம். இருப்பினும், கற்பிப்பதற்குத்  தேவையான ஆசிரியப் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் இன்று மாணவர்களுக்கு கற்பிக்கிறார்கள். யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின், 2017 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 85%  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இருப்பினும், இந்த எண்ணிக்கை, கணிசமான அளவில் பிராந்திய  வேறுபாடுகள் இருப்பதை  மூடி மறைக்கிறது. எடுத்துக்காட்டாக,  ஆப்பிரிக்கா துணை சஹாராவில்  64% ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர்.  தெற்காசியாவில்  இந்த அளவு  71%  எட்டியுள்ளது.
ஆசிரியர் தகுதி இல்லாமை, மாணவர் நெரிசல் உள்ள வகுப்பறை அதிகரித்து வருதல் ஆகிய இரண்டும் இணைந்த  நிலைமை மேலும் கவலைக்குரியதாக உள்ளது.  தெற்காசிய நாடுகளில் ஆரம்ப பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு   35 மாணவர்கள் என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது,  ஆப்பிரிக்கா துணை சகாராவில்  ஒரு ஆசிரியருக்கு 38 மாணவர்களின் விகிதம் உள்ளது.
யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய நிகழ்வாக, அக்டோபர்  4  அன்று "துணை சஹாரா ஆப்பிரிக்காவில் ஆசிரிய கல்வியை தரம் மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 
அக்டோபர் 5 இன்று,   ஆசிரியர்களும்  கல்விக்கான  உரிமையும் என்ற விவாதம் நடத்தப்பட உள்ளது.  ஆசிரியர் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் திட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பாற்றியதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  யுனெஸ்கோ (UNESCO) - ஹாம்டான் பின் ரஷித் அல்-மகுடூம் (Hamdan Bin Rashid Al-Maktoum)  இணைந்து வழங்கும் 5 ஆவது விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கான சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள  திட்டங்கள்  1994 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. 1966 சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) / யுனெஸ்கோவின் ஆசிரியர்களின் நிலை பற்றிய பரிந்துரைகளை உலக ஆசிரியர் நாள் நினைவுபடுத்துகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் அனைத்துலகக் கல்வி (Education International) ஆகியவற்றோடு இணைந்து இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.
கல்வி குறித்தான நிலையான வளர்ச்சிக் குறிக்கோள் (SDG)  4 ஐ,  2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றும் நோக்கில் அது சார்ந்த சாதனைகள் பங்களிப்புகளை கவனத்தில் கொள்வதோடு, கற்பித்தல் தொழிலை மேம்படுத்துவதற்கும்  உலக ஆசிரியர்  நாள் ஒரு வாய்ப்பாக உள்ளது.  யுனெஸ்கோ தலைமையகம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நடைபெறும்  ஒரு சர்வதேச நிகழ்வாக உலக ஆசிரியர் நாள் குறிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆசிரியர் பயிற்சித் தகுதியுள்ள ஆசிரியர்களின் நிலை என்ன?
நமது நாட்டில் கடந்த 2010, ஏப்ரல் 1 – இல் நடைமுறைக்கு  வந்த கல்வி உரிமை சட்டத்தில்   தொடக்க மற்றும் உயர் தொடக்கப்  பள்ளிகளில் (ஒன்று முதல் எட்டு வகுப்புகள்) பணியாற்றுவோர் ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச தகுதியை பெற்றிருக்கவேண்டும் எனவும் 2015, மார்ச் 31-க்குள் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றும் அனைவரும்  ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்கவேண்டும் எனவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய மாநில அரசுகளால் இதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்  பள்ளிகளில் பணியாற்றும்  பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான காலக் கெடுவை
நீட்டிக்குமாறு மாநில அரசுகள். மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து வரும் 2019 வரை காலக்கெடுவை நீடிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக ‘குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி ( திருத்த) மசோதா 2017 ஆம் ஆண்டு  மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
தனியார் பள்ளிகளில் 7 இலட்சம் தகுதியற்ற ஆசிரியர்களும் அரசுப்பள்ளிகளில் 2.5 இலட்சம் தகுதியற்ற ஆசிரியர்களும் 1.5 இலட்சம் ஓராண்டு மட்டும் பயிற்சி முடித்த தகுதியற்ற ஆசிரியர்களும் பணியாற்றி வந்ததாக சட்ட வரைவை தாக்கல் செய்த போது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறினார்.
ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான நிதி அனைவருக்கும் கல்வித்  திட்டத்தின் (SSA)  கீழ் வழங்கப்படவுள்ளது. அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக பங்கீட்டு வழங்கும் எனவும் திருத்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள் முழுநேரப்பயிற்சியாக நடத்தப்படாமல் பள்ளிகளின் வார விடுமுறை நாள் பயிற்சியாக மட்டுமே நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் வேலைசெய்யும் சுமார் 20 ஆயிரம் தகுதியற்ற ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சுமார்  15 லட்சம் பேரும்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களும்  உள்ள நிலையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் காலடி எடுத்து வைக்காத 26  ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருவது கவலை அளிக்கிறது. பயிற்சி பெறாதவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்ற ஒரே காரணத்தினால் இப்படிப்பட்ட கல்வி அவலங்கள் நடக்கின்றன. குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அக்கறையின்மையும் அரசாளுகை முறைகளில் உள்ள குறைபாடுகளும்  இதற்கு முதன்மைக் காரணங்களாகும்.
கல்வி உரிமைச்சட்டத்தை நிறைவேற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 135 ஆவது நாடாக இடம் பிடித்தது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் கால நீட்டிப்பு சட்ட திருத்தம் செய்யும் நிலையில் நாம் உள்ளோம். நாட்டில் உள்ள குழந்தைகளுக்குத் தரமான  கல்வி வழங்குவதில் நமது அக்கறையின்மை குறித்து உலக ஆசிரியர் நாளில் கவலை கொள்வோம். மாற்றம் காண விளைவோம்.
நன்றி,
திரு சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு,
செயற்குழு உறுப்பினர், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்.
பேசி: 9965128135




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive