பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டால்
பெட்ரோல் வினியோகிக்கும் மீட்டர் தானாகவே பூஜ்ஜியத்தில் வந்து நின்று விடும். இது தொழில்நுட்பம் காரணமாக ஏற்படும் ஒய்2கே பிரச்னை. எனவே, பெட்ரோல் மீட்டர் கருவிகளை 3 இலக்க எண்ணுக்கு மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மக்கள் மண்டையை உடைத்துக் கொண்டுள்ளனர். இந்த விலை உயர்வு, விரைவில் ₹100ஐ எட்டும் என கூறப்படுவது, மக்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மக்களுக்கு மட்டுமின்றி பெட்ரோல், டீசலை விற்கும் பங்க் உரிமையாளர்களுக்கும் அடுத்ததாக பெரிய தலைவலி காத்திருக்கிறது.
அதன் பெயர், ‘ஒய்2கே’ என்ற பிரச்னை.அது பற்றிய ஒரு அலசல் இதோ:
பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு லிட்டர் அளவிலோ அல்லது குறிப்பிட்ட தொகை அளவிலோ பெட்ரோலை நிரப்பும் வசதியுள்ளது. பெட்ரோல் வினியோகிக்கும் மீட்டரில் இரண்டு இலக்க எண் மட்டுமே புரோகிராம் செய்து வைத்திருப்பதால் பெட்ரோல் விலை ₹100ஐ கடந்தால் மீட்டர் தானாகவே 0.00 என்று காட்டிவிடும். இதை ஒய்2கே பிரச்னை என்று தொழில்நுட்ப நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏற்கனவே கணினிகளில் 2000 ஆண்டு வரை தான் புரோகிராமிங் செய்து வைத்திருந்தனர். எனவே, 2000ம் ஆண்டு முடிந்தவுடன் தானாகவே 0000 என்று வருடத்தை காண்பிக்கும் நிலை உருவானது. அதே நிலைதான் தற்போது பெட்ரோல் வினியோகிக்கும் மீட்டர்களுக்கும் உருவாகியுள்ளது.
பெட்ரோல் விலை இரண்டு இலக்கத்திலும், இரண்டு புள்ளி எண்ணிலும் இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், விலை ₹100ஐ தொட்டால் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இப்பிரச்னை வெடிக்கும். தற்போதைய நிலைப்படி ₹99.99 வரை மீட்டர் தெளிவாக காண்பிக்கும் ₹100.00 என்று வந்தால் தானாகவே 0.00 என்று காட்டிவிடும். இதனால், பெட்ரோல் வினியோகிப்பவருக்கும், வாடிக்கையாளருக்கும் தேவையில்லாத குழப்பங்கள் உருவாகும்.
இது குறித்து கர்நாடக பெட்ரோலியம் டீலர் சங்க தலைவர் பசவ கவுடா கூறியதாவது: கர்நாடகாவை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் டிசம்பருக்குள் பெட்ரோல் ₹100ஐ தொட்டுவிடும் என்ற அச்சம் உள்ளது. அதன்படி பார்த்தால் பெட்ரோல் வினியோகிக்கும் கருவியின் மீட்டர் இரண்டு இலக்கத்தில் இருந்து 3 இலக்கத்துக்கு மாற்ற வேண்டும். கர்நாடக மாநிலத்தில் 4,200 பெட்ரோல் பங்க்குகள் உள்ளது.
இத்தனை பங்க்குகளிலும் கருவியை மாற்ற கால அவகாசம் தேவைப்படும். பெட்ரோல் விலை ₹100ஐ தொடும் பட்சத்தில். லிட்டர் அளவில் தான் நிரப்ப முடியும். இது போன்ற பிரச்னைகளை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் சந்திக்க வேண்டும். வாடிக்கையாளர்களும் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...