ஜியோ ஃபீச்சர் போன்-2வில் வரும் 20ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் சேவை அறிமுகமாகவுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், ஃபீச்சர் போன்-2வை அறிமுகம் செய்து தனது அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகி வருகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் வசதிகளைக் கொண்டு KaiOS தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஜியோ ஃபீச்சர் போன்-2 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜியோ ஸ்டோரில் அறிமுகமானது. தற்போது இந்தப் போனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலி வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளியாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ போன், ஜியோ போன்-2வைப் பயன்படுத்தும் பயனர்கள் இந்தப் பிரத்யேகச் செயலியை ஜியோ ஸ்டோரில் சென்று நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் மாடல்களில் உள்ள வாட்ஸ் அப் சேவையைப் போலவே இதிலும் end-to-end encryption வசதி உள்ளது. வாய்ஸ் ரெக்கார்ட், வாய்ஸ் மெசேஜ் சேவைகளைக் கொண்டுள்ள இந்தப் போனில் வாய்ஸ் கால், வீடியோ கால் சேவை கொடுக்கப்படவில்லை.
இந்த செயலியின் வெளியீடு குறித்து ஊடகத்திற்குப் பேட்டியளித்த வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ், "இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள், இந்தியா முழுவதும் இனி ஜியோ போனில் வாட்ஸ் அப் ப்ரைவேட் மெசேஜ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். KaiOS இயங்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பிரத்யேக செயலியைக் கொண்டு ஜியோ பயனர்கள், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் சிறந்த சேவையை அனுபவிக்கமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 20 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த புதிய சேவையை அடுத்து இந்த எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய சந்தையில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...