மாணவர் எண்ணிக்கை சரிவு: பயிற்சி முடித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
திருவண்ணாமலை: அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், ஆசிரியர் பயிற்சி முடித்த சுமார் 8.50 லட்சம் பேர் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையும் சரிந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகள் கேட்பாரற்ற நிலையில் இருக்கின்றன. புதிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் போதுமான கவனம் செலுத்தவில்லை என கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர். அதனால், மாணவர்கள் சேர்க்கையும் சரிய தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில், 5,919 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதுதவிர, 1,909 அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அதேபோல், 31,393 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. மேலும், 6,597 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி சுமார் 90 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சார கணக்கின் அடிப்படையில், 30 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. குறிப்பாக, பெரும்பாலான அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. மேல்நிலை வகுப்புகளுக்கான கணக்கு மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்கள் இல்லாமல் ஏராளமான பள்ளிகள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பாட வகுப்புகளை நடத்தும் நிலை உள்ளது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் இல்லாத ஏராளமான பள்ளிகள் உள்ளன.
அரசு பள்ளிகளில் தூய்மைப்பணிக்கான பணியாளர்கள், அமைச்சு பணியாளர்கள், இரவு காவலர்கள், உதவியாளர்கள் ஆகிய அடிப்படை பணியாளர்கள் நியமனம் செய்வதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில்தான் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் கூட்டு இயக்கங்கள் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில், மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக பலமுறை அறிவிப்புகள் மட்டும் வெளியானதே தவிர, இதுவரை ஆசிரியர் பணி நியமனம் பெருமளவில் நடைபெறவில்ைல. கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும்கூட இன்னும் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். அதோடு, ஏற்கனவே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும், மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்ற குழப்பமான அறிவிப்பு சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் முடித்த சுமார் 8.50 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆசிரியர் பணி நியமனம் இல்லை. ஒருவேளை பணி நியமனம் நடந்தாலும் தகுதித்தேர்வு என்ற நெருக்கடி போன்றவற்றால், இவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் முடித்த லட்சக்கணக்கானவர்கள், வேலை கிடைக்காமல் 58 வயதை நெருங்கியும், கடந்தும் இருப்பது வேதனையின் உச்சமாகும்.
அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் பணிவாய்ப்பு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்்கிறது புதிய கல்விக்கொள்கை. எனவே, மாநிலம் முழுவதும் வேலைக்காக காத்திருக்கும் 8.50 லட்சம் பேரின் எதிர்காலம், நெருப்பாற்றை நீந்திச் செல்லும் துயரத்துக்கு இணையாக மாறியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்படிப்புகளுக்கு இணையாக மதிக்கப்பட்டது ஆசிரியர் பயிற்சியும், பிஎட் பட்டப்படிப்பும். ஆனால், அரசின் தவறான கல்விக்கொள்கைகளால் இன்றைக்கு கைவிடப்பட்ட படிப்புகளாக மாறிவிட்டன. அதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், 250க்கும் மேற்பட்ட பி.எட் கல்வியியல் கல்லூரிகளும் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கையின்றி வெறிச்சோடியிருப்பது அவலத்தின் உச்சமாகும். ஆசிரியர்களை போற்றாத சமுதாயம் உயர்வடையாது. எனவே, நம்பிக்கையிழந்து வரும் அரசு பள்ளிகளை மேம்படுத்த, ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவது மட்டுமே உடனடித் தீர்வாகும்.
தகுதியை வளர்க்கிறதா தகுதித்தேர்வு?
மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் ‘நீட்’ தேர்வைப் போல, ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. ஆசிரியர் பணி என்பது, கற்றல், கற்பித்தல் திறன் சார்ந்தது. அதனை, 3 மணி நேரம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே அளவாக வைத்து கணிக்க முடியாது என்பது கல்வியாளர்களின் கருத்து. எனவே, தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணிக்கான முழுமையான தகுதியை தருகிறதா என்பது கேள்விக்குறியே.
பதிவு மூப்புக்கு மரியாதை இல்லை
தகுதித் தேர்வு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. ஆனால், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மூடுவிழா காணும் பி.எட். கல்லூரிகள்
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 16 பி.எட். கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு, அரசு அங்கீகாரம் வழங்குவது ‘தாராளமானதால்’ புற்றீசல் போல பி.எட் கல்லூரிகள் தமிழகம் எங்கும் உருவானது. கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு, பட்டப்படிப்புடன் தகுதித் தேர்வும் அவசியம் என்ற நெருக்கடி உருவானது. பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவானது. எனவே, பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை முற்றிலுமாக குறைந்துவிட்டது. எனவே, நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலான பி.எட் கல்லூரிகள் மாநிலம் முழுவதும் மூடுவிழா காணும் நிலை ஏற்பட்டுள்ளது
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூட வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உடைக்கப்படுகிறது.
ReplyDeleteதனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி தனக்குத்தானே உலைவைத்துக் கொல்(ள்) கிறது.