டிஜிட்டல் பேமென்டில் களமிறங்கியுள்ள
கூகுள் தற்போது தன் பயனாளர்களுக்குக் கடன் வழங்கும் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் எத்தனையோ புதிய விஷயங்கள் வந்தாலும் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளித் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது கூகுள் நிறுவனம். தன் பல்வேறு சேவைகள் மூலம் பல விதங்களில் பயனாளர்களை ஈர்த்து வருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளுக்குக் குறைந்தது 10 முறையாவது கூகுளைப் பயன்படுத்துவர் என்ற அளவுக்கு அதன் ஆதிக்கம் உள்ளது. கூகுள் மேப், யூடியூப், ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் ட்வைவ் போன்ற பல ஆப் மூலமாகப் பல சேவைகளைச் செய்துவரும் கூகுள் தற்போது டிஜிட்டல் பேமென்டிலும் கால் பதித்துள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக டிஜிட்டல் பேமென்ட் அதிக வளர்ச்சியடைந்து வருகிறது. பேடிஎம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களும் டிஜிட்டல் பேமென்டில் இறங்கிவிட்டன. இவற்றின் வரிசையில் கூகுளும் இணைந்துவிட்டது. முன்னதாக கூறிய அனைத்து சேவைகளிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. அதன் வரிசையில் அடுத்தபடியாக டிஜிட்டல் பேமென்டிலும் முன்னிலை பெற கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்தியாவில் உள்ள சில பெரிய வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ., கோடாக் மஹிந்திரா பேங்க் மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்குடன் டிஜிட்டல் நிதி சேவை வழங்கும் திட்டத்தைக் கடந்த வாரம் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ( payments) கேசர் செங்குப்தா தெரிவித்துள்ளார். இதே கூகுள் நிறுவனம் கடந்த வருடம் கூகுள் டெஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் சில அடிப்படை நிதி சேவைகளை வழங்கி வந்தது. தற்போது அதையே கூகுள்பே என்று பெயர் மாற்றம் செய்து அதன் மூலம் எளிய முறையில் பயனர்களுக்கு கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது அதில் கேட்கப்படும் சில ஆவணங்களை வங்கியில் வழங்கி ஒப்புதல் பெற்றால் உடனடியாக கடன் தொகை பயனர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில மொழிகளில் இந்தச் செயலியை வழங்க இருப்பதாகவும் இதன் மூலம் கேஷ்பேக் சேவையையும் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...