சென்னை
பதிவுத் துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வழியாக முத்திரைத்தாள் விற்பனை செய்யும் நடைமுறை நாளை முதல் அமலாகிறது.
இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பதிவுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டத்தை வரிசைப் படுத்தவும், ஒழுங்கற்ற முறையை தவிர்க்கவும், முன்பதிவு செய்த டோக்கன் வரிசையில் எவ்வித பாகுபாடுமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி ஆவணம் பதிவு செய்ய டோக்கன்களை 30 நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஒரு வேலை நாளில் முன்பதிவு செய்த டோக்கன்களை அதன் வரிசையிலேயே பதிவு செய்யும் முறையும் அமல்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு நாளில் முன்பதிவு செய்த டோக்கன்களும், அந்நாளில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களும் சரிபார்க்கப்பட்டன. இதில் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ததில் 40 சதவீத டோக்கன்களுக்கான பத்திரங்கள் மட்டுமே பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் விவரம் தெரியவந்தது. மேலும் போலியான தகவல்களை பதிவேற்றம் செய்து டோக்கன் முன்பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதைத் தவிர்க்க, டோக்கன் பெற, ஸ்டார் 2.0 மென்பொருளில் மின்னணு-கட்டணம் (e-payment) அல்லது முத்திரைத்தாள் எண்ணை பதிவு செய்த பின்பே டோக்கன் பெறும் வகையில் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இம்முறையில் பதிவு செய்த முத்திரைத்தாள் அல்லது கட்டண விவரத்தை சரிபார்க்க வேண்டி யுள்ளது. எனவே, செப்.22-ம் தேதி (நாளை) முதல் ஸ்டார் 2.0 மென் பொருள் வழியாக முத்திரைத்தாள் விற்பனை அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, மாவட்ட பதிவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விற்பனையாளர்கள் எண்ணிக் கையை பதிவு செய்து, சார்பதி வாளர்கள் மூலம், விற்பனையாளர் களுக்கு உள்நுழைவு முகவரி, கடவுச்சொல் வழங்கப்படும். அதன் பின் முத்திரைத்தாள் விற்பனை யாளர்கள் தங்களுக்கு அளிக் கப்பட்ட முகவரி, கடவுச்சொல்லை பயன்படுத்தி, பதிவுத்துறை இணையதளத்தில் ‘இருப்பு’ மற்றும் விற்பனை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதை தவறாது பின்பற்ற வேண்டும்.
தற்போது ரிசர்வ் வங்கியால் முத்திரைத்தாளில் வழங்கப்படும் வரிசை எண்ணையே பதிவு செய்ய வேண்டும். முத்திரைத்தாள் வாங்குபவர்கள் பெயர், விவரங்களை, விடுதல்கள் இன்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும். ஆவணதாரர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நபரால் முத்திரைத்தாள் வாங்கப்பட்டால், அந்த நபரின் விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் விற்பனை பதிவேடு, இருப்பு கணக்கு பதிவேடு விவரங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக, முத்திரைத் தாள் விற்பனையாளர்களுக்கு சார்பதிவாளர்கள் உரிய பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...