தமிழ்நாட்டில், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும்,
வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித
உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக்கொள்ள ஏதுவாக, மேற்படி
தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த
தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
இதை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை
மேற்கொண்டு வருகிறது. எந்த ஒரு திட்டமும் மக்களிடம் எளிதில் சென்றடைய
வேண்டுமானால் அதனை மாணவர்கள் மூலம் செயல்படுத்தினால் தான் வெற்றி அடைய
முடியும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் பேட்டியளித்த
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “தமிழகத்தில் உள்ள
பள்ளிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது” என
தெரிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், பள்ளிக்
கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில், “பிளாஸ்டிக் பொருட்களால்
ஏற்படக்கூடிய தீமைகளை தடுப்பதற்காக மாணவர்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை வகுப்பறைகள்
மற்றும் பள்ளி வளாகத்தில் உருவாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத பகுதி அல்லது பிளாஸ்டிக்
பொருட்கள் பயன்பாடு இல்லாத பள்ளி என்று அறிவித்து பிளாஸ்டிக் பொருட்கள்
பயன்பாடு இல்லாத சூழலை உருவாக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, அரசு, அரசு உதவி பெறும்,
சுயநிதி மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. உள்ளிட்ட அனைத்து வகை
பள்ளிகளுக்கும் பொருந்தும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...