கற்பித்தல் மட்டும்
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது விழா ஆகியவை முப்பெரும் விழாவாக சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
373 ஆசிரியர்களுக்கு விருது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் காந்திய அனுபவக் கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி என்ற நூலை முதல்வர் வெளியிட்டார். 373 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி விருதுகளை வழங்கி அவர் பேசியது:
ஆசிரியர் என்பவர் கற்பித்தலில் மட்டும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. அவதானி, ஆலோசகர் உள்ளிட்ட பல பரிமாணங்களில் தேடலுக்கு வழி செய்பவராக விளங்க வேண்டும் என கல்வியாளர் லூயில் கோகலே என்பவர் கூறியுள்ளார்.
ஏட்டுக் கல்வியின் வரையறையைத் தாண்டி, பரந்த பரிமாணத்தில், சமூக பொறுப்புடன் தீர்மானிக்கும் திறனோடும், வசீகரிக்கும் தன்மையோடும், சினேகித மனோபாவத்தோடும், சமூக மேம்பாட்டுக்கு வழிகாட்டும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
தியாக மனப்பான்மை கொண்டவராகவும் கற்பிக்கும் தொழிலில் பெரும் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.
மாணவ சமுதாயமும் தங்களின் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
கல்வித் துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கிராமங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள், 32 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் என மாணவர்களை மேம்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
மாணவ சமுதாயம் நினைத்தால்...மாணவ சமுதாயம் நினைத்தால் எதையும் செய்ய இயலும். இதை ஆசிரியர்களும் நன்கு அறிவர். எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பாட நூல்களைத் தாண்டி, மாணவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தற்போது சமூக நலன் சார்ந்து தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதின் மூலம், ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. விருது என்கிற பயணச்சீட்டைத்தான் உங்களுக்கு வழங்கியுள்ளோம். இன்னும் நீங்கள் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு இருக்கிறது. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருந்து புதிது புதிதாகப் படிக்க வேண்டும். தான் படித்தவற்றை தன் மாணவர்களுக்கு தொடர்ந்து கற்பித்து வர வேண்டும். அதுதான் நீங்கள் மாணவர் சமுதாயத்திற்கு செய்யும் சீரிய தொண்டாகும் என்றார் முதல்வர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாணவ சமூகத்துக்குத் தேவையான அறிவாற்றல், தன்னம்பிக்கை போன்றவற்றைக் கற்றுத் தந்து மாணவர்களை அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னதப் பணியினை மேற்கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள்.
பள்ளிகளில் நிலவும் சூழலை மிகத் திறமையாகக் கையாண்டு, மாணவர்களுக்கு சிறந்த கல்வியறிவை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். ஆசிரியர்கள் தங்களது உழைப்பால், சமூகத்தின் மீது உள்ள அக்கறையால் மேற்கொள்ளும் சிறப்பு பணியை பாராட்டியே, இன்றைய தினம் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது என்பது ஆசிரியர்களின் கல்விப் பணியை மேலும் சிறப்புடன் செய்வதற்காக வழங்கப்படும் பெருமையாகும்.
இதனைச் சரியான முறையில் ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொண்டு, சமூகத்தின் உயர்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...