ஆசிரியர் தினம் புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் புரோஹித்:
முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சிறந்த, மிகப் பெரிய ஆண் மற்றும் பெண்ணின் குணாதிசயங்கள், தொலைநோக்குப் பார்வை போன்றவை அவர்களின் ஆசிரியர்கள் அளிக்கும் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல்களில் இருந்தே கிடைக்கிறது.
ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளோரின் விலைமதிப்பில்லாத பங்களிப்பானது சமூகத்தாலும், மாநிலத்தாலும் இந்தத் தினத்தின் போது அங்கீகரிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன்கள், ஒழுக்கம், அறிவு, நலன்கள் ஆகியவற்றை உயர்த்துவதில் அளப்பரிய பணியை ஆசிரியர்கள் ஆற்றி வருகிறார்கள். சமூகத்தை தகவமைப்பதில் பெரும் பங்கினை அளித்து வரும் ஆசிரியர்களுக்கு இந்தத் தினத்தில் நமது மரியாதையையும், மதிப்பையும் அளித்திடுவோம்.
முதல்வர் பழனிசாமி:
மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் விதைத்து, அவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் மகத்தான பணியை நல்லாசிரியர்கள் ஆற்றி வருகிறார்கள். அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் போன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியை இளம் தலைமுறையினருக்கு கற்பித்து, அறிவுசார் சமூகத்தை உருவாக்கிடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
மு.க.ஸ்டாலின் (திமுக):
கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு திமுக சார்பில் நல் வாழ்த்துகள். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது. ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக திமுக என்றும் துணை நிற்கும்.
ராமதாஸ் (பாமக):
ஆசிரியர் தினத்தன்று தமிழக அளவிலும் தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள். இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய சமூகக் கடமை உள்ளது. சமூகத்துக்கு ஏற்றம் தரும் ஏணியாகத் திகழும் ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கிறது. ஏழாவது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்த பிறகும் ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. ஆசிரியர்கள் நலனுக்கான வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டனர். இந்த நிலை மாறி தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதும் அவசியமாகும்.
ஜி.கே.வாசன் (தமாகா):
மாணவர்கள் கல்வி கற்று படிப்படியாக முன்னேறி நல்ல மனிதனாக நல்வாழ்க்கை வாழ அடித்தளமான பணிகளில் ஈடுபடுவதில் முதலும் முக்கியமுமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள்தான் வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதில் இன்றியமையாத பணிகளை மேற்கொள்பவர்கள்.
எனவே, ஆசிரியர்களின் பணிக்கு எந்த விதத்திலும் இடையூறோ, தடங்கலோ, பாதிப்போ இருக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, அனைத்து துறையைச் சார்ந்தவர்களும் உறுதியாக இருக்க வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக):
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு' என்றுரைத்த பாரதியின் சரித்திர பதிவை, மெய்ப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் உழைத்திடும் ஆசிரியர்கள் ஏணிப்படிகள் போன்றவர்கள். மாணவச் செல்வங்களை அறிவிலும், ஆற்றலிலும் உயர்த்திவிடும் தியாகிகள். அழிவில்லாத கல்வி செல்வத்தை, உலகின் எதிர்காலமாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிட அயராது உழைத்திடும் ஆசிரியர்களின் நல்வாழ்வு செழிக்கட்டும். அவர்களின் தூய பணி மென்மேலும் தழைக்கட்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...