சென்னை : பள்ளி கல்வி துறையில்
தேங்கி கிடக்கும், 7,500 வழக்குகளை நடத்த, கடும் நிதி தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில், பள்ளி கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம், தேர்வுத்துறை, ஒருங்கிணைந்த கல்வி திட்டம், மெட்ரிக் இயக்குனரகம் என, பல்வேறு பிரிவுகள் உள்ளன.இவற்றின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்குகளை எல்லாம், பள்ளி கல்வி, தொடக்க கல்வி மற்றும் டி.ஆர்.பி.,யின் தலைமை அலுவலக ஊழியர்கள்தான் நடத்த வேண்டும்.இந்த வழக்குகளுக்கு, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வது, ஆவணங்களை சேகரிப்பது, தினமும் நீதிமன்றங்களுக்கும், அரசு வழக்கறிஞர் அலுவலகங்களுக்கு செல்வது என, பல்வேறு பணிகளில், அலுவலக பணியாளர்கள் ஈடுபட வேண்டியுள்ளது.ஒவ்வொரு நாளும், வழக்கில் ஆஜராக, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கட்டணம், பதில் மனுக்களை தயார் செய்வதற்கு கட்டணம், போக்குவரத்து செலவு, என பல்வேறு செலவுகள், ஊழியர்களுக்கு ஏற்படுகின்றன. ஒரு வழக்கை, ஒருநாள் எதிர்கொள்ள, குறைந்த பட்சம், 2,000 ரூபாய் வரைசெலவாகிறது.இந்த செலவுக்கு, அரசிடமிருந்து எந்த நிதியும் இல்லாததால், பள்ளி கல்வி ஊழியர்கள், தங்களின் சொந்த பணத்தை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில், வேறு நிர்வாக பணிகளுக்கு, கல்வி அலுவலகம் வருவோரிடம், நீதிமன்ற செலவு என்று கூறி, வசூல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வழக்கு போட்டவர்களையே அழைத்து, அரசின் சார்பில் வழக்கை எதிர்கொள்ள, அவர்களையே செலவு செய்ய கட்டாயப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.இதனால், சில வழக்குகளில், மனுதாரர்கள், அரசு தரப்புக்கும் சேர்த்து செலவு செய்து, தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வழக்குகளை நடத்துவதற்கு சரியான நிதி ஒதுக்கும்படி, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு, ஊழியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...