மத்திய அரசு, தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கவிருப்பதும், ஆசிரியர் தகுதித் தேர்வையடுத்து தமிழக அரசு புதிய போட்டித் தேர்வை அறிவித்திருப்பதும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மட்டுமல்லாது கல்வியாளர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.சுய சிந்தனையை வளர்ப்பதே உயர்கல்வியின் நோக்கம் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். இதற்குக் காரணமானவர் தத்துவப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். அவர் தலைமையில் 1948-இல் உருவாக்கப்பட்டது இது."அனைவருக்கும் தரமான உயர்கல்வி' என்ற இலக்கோடு 1956-இல் உருவான பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சட்டபூர்வ அமைப்பு. மாணவர் கல்வி உதவித் தொகை திட்டத்தை முன் வைத்த சி.டி. தேஷ்முக் மற்றும் மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் மாத ஊதியத்துக்கு இதன் தலைவர்களாகப் பணியாற்றினர். இவ்வாறு கல்வியாளர்களாலும், தொலைநோக்குப் பார்வையாளர்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் இப்போது கலைக்கவிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
இப்போது இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு வரவிருக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தொடர்பே இல்லாதவர்கள், இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்கலாம்.
உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இந்த நடவடிக்கையின் முன்னோட்டம் 2018 ஜூன் 28 அன்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஆங்கில மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது. வேறு எந்த இந்திய மொழியிலும் வெளியிடப்படவில்லை.கருத்து கேட்கும் முன்வரைவாகவே அது முன்வைக்கப்பட்டாலும் குறுகிய கால அவகாசமே கருத்து கேட்புக்குத் தரப்பட்டது. அதிலும் மசோதா என்பதற்குப் பதிலாக சட்டம் என்ற பதத்துடன் "இந்திய உயர்கல்வி ஆணையம் சட்டம் 2018' முன் வரைவாக அறிவிக்கப்பட்டது.
ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் சட்டமாக மாறும். அதுவரை அது வரைவு மசோதா என்றே அழைக்கப்படும். ஆனால் இந்த ஆவணம் "முன் வரைவுச் சட்டம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
கல்வி என்பது மத்தியப் பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதால் இந்த வரைவு மசோதா மாநில உரிமையை மீறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானதாகும் என்று மாநிலங்கள் எதிர்க்கின்றன.
அத்துடன் இந்த வரைவு மசோதா பிரிவு 3 துணைப்பிரிவு (6)-இன்படி உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் பதவிக்கு வெளிநாட்டு குடிமக்களில் ஒருவரை நியமிப்பதற்கு வழி செய்கிறது.
'
"பல்கலைக்கழக மானியக் குழு' என்னும் அறுபதாண்டு கால சட்டபூர்வ அமைப்பு, அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி ஒரு சமூகப் பொருளாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பைக் கலைப்பதற்கு இவ்வளவு அவசரம் ஏன்?
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருந்தது. அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல், யுஜிசி செயல்படா அமைப்பாக உள்ளது என்றும் மாற்று அமைப்பை உருவாக்குவது பற்றியும் பேசியுள்ளார்.
யுஜிசி செயல்படா அமைப்பாக இருப்பதற்கு யார் காரணம்? அதனை செயல்பட வைக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இந்தக் கேள்விகள் பரவலாக எழுந்ததும் அப்போதைய அரசு அடங்கிப் போனது.
தமிழக அரசின் கல்வித்துறை, நீண்ட காலத்திற்குப் பிறகு பெரும் மாறுதல்களைச் செய்து மக்கள் மத்தியிலும், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியிலும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பள்ளி ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு வந்தபோதே அதைக் கல்வியாளர்களும், ஆசிரியர் இயக்கங்களும் எதிர்த்தனர். பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு ஆசிரியர் பணிக்கான பயிற்சியும், பட்டயமும் பெற்ற நிலையில், இந்தத் தேர்வு தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இப்போது தமிழக அரசின் ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியப் பயிற்சிப் பட்டம் பெற்றவர்களும், கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்த வரிசையின் அடிப்படையில் பணி இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே இதுவரை இருந்து வந்த நடைமுறை.
இந்த நிலை மாற்றப்பட்டு அவ்வப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப் போவதாகத் தமிழக அரசு கூறுவது ஏன்?
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்றும், அப்படி கிடைப்பவர்கள் காலம் கடந்து வேலைக்கு வருவதால் படித்ததை மறந்து விட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.இப்போது படிப்பை முடித்துவிட்டு வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கும்போது அவர்களுக்குப் பாடங்கள் மறந்து போகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டிய அரசுகள் தங்கள் கடமைகளில் இருந்து நழுவுகின்றன. இது மாணவரிடம் அவநம்பிக்கையையும், ஊழலையும் வளர்க்கவே உதவும். ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்திட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு, உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப் போய்க் கொண்டே யிருக்கிறது. கடந்த முறை நடந்த தகுதித் தேர்வு பற்றிய ஊழல் புகாரும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 200 பேருக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 7 லட்சத்து 53 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். அவர்களில் 34,979 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அத்தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், மதிப்பெண்ணில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அத்தேர்வை ரத்து செய்தது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள்களை "ஸ்கேன்' செய்த அதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வு விடைத்தாள்களையும் "ஸ்கேன்' செய்திருந்தது. விரிவுரையாளர் தேர்வைப் போலவே தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடி செய்யப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்தின் மூலம் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் "ஸ்கேன்' செய்யப்பட்டன. அப்போது சுமார் 200 பேருக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெறச் செய்திருப்பது தெரிய வந்தது.
அந்த 200 பேரின் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத் தாள்களை கணினியில் உள்ளீடு செய்து அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த 200 தேர்வர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டதுடன் அவர்கள் இதர தேர்வுகளை எழுதவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஊழல் நடப்பது இது முதன்முறையல்ல. காலம் அவற்றை மறந்து விடுகிறது. அரசுத் துறைகளும் அவற்றை மறைத்து விடுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பெயரளவுக்கு "தகுதி தேர்வு' என்றும், "போட்டித் தேர்வு' என்றும் கூறப்படுகிறதே தவிர, உண்மையானவர்களுக்குச் சென்று சேரவில்லை. பணம் படைத்தவர்கள் பாதியில் தட்டிப் பறித்துக் கொள்ள வழிவகுக்கிறது. இது அரசுக்கும், தொடர்புடைய துறைகளுக்கும் தெரியாதா? நன்கு தெரியும். தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பது இயற்கை விதி. அந்த மாற்றங்கள் ஏற்றங்களுக்குத் துணைபோக வேண்டுமே தவிர ஏமாற்றங்களுக்குத் துணை போகக் கூடாது
செய்தி:தினமணி..
Pongada neengalum unga thakuthi thervum
ReplyDelete