நாடு முழுவதும் புதிய இன்சூரன்ஸ் முறை
இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வருடம் ஒருமுறை செலுத்தப்பட்டு வந்த வாகனங்களின் இன்சூரன்ஸ் கட்டணம், இன்று முதல் நீண்ட கால அளவில் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் போதே வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த புதிய விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வருவதால், இன்று முதல் விற்கப்படும் புதிய வாகனங்களுக்கான விலையும் குறைந்த பட்சம் ரூ.1000 முதல் ரூ.24,000 வரை உயரும் என்று கூறப்படுகிறது.
மோட்டார் வாகனச் சட்டப்படி 'தேர்டு பார்ட்டி' எனப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம். ஆனால் பல வாகனங்கள் இந்த இன்சூரன்ஸ் தொகையை கட்டாததால் விபத்து ஏற்படும்போதும் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதையடுத்து மொத்தமாக இந்த தொகையை வண்டி விற்பனை செய்யும்போதே வசூலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய தரைவழிப் போக்குவரத்துதுறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதன்படி, இந்த புதிய இன்சூரன்ஸ் திட்டம் கார்களுக்கு 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டு களாகவும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
1,000 முதல் 1,500 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305 ஆகும்.
இரு சக்கர வாகனங்களுக்கு, 75 சிசி இன்ஜின் திறனுக்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,045 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
75 முதல் 150 சிசி இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ.3,285 ஆகவும், 150 முதல் 350 சிசி கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,453 ஆகவும் வசூலிக்கப்படும்.
350 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,034 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வாகனங்களின் விலை உயர்வு கட்டாயமாகி உள்ளது.
மூன்றாம் தரப்பினருக்கான காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?
இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளில் உள்ளது.அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.
விரிவான காப்பீட்டுத் திட்டம் :
1. வாகனத்திற்கு விபத்து அல்லது தீ விபத்து ஏற்பட்டாலும், மின்னல் வெட்டால் வாகனங்கள் சேதமடைந்தாலும் இத்திட்டம் அந்த வாகனங்களுக்கு காப்பீடு அளிக்கிறது.
2. மேலும் வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் இத்திட்டம் அந்த வாகனங்களுக்கு காப்பீடு அளிக்கிறது.
3. வாகனங்கள் தேவை இல்லாத காரணங்களுக்காக தீவைக்கப்பட்டாலும் அல்லது வன்முறையின் போது வாகனங்கள் சேதமடைந்தாலும் இத்திட்டமானது அந்த வாகனத்திற்கு காப்பீடு அளிக்கிறது.
4. வாகனம் திருட்டு போதல் போன்ற காரணங்களுக்காகவும் இத்திட்டம் அந்த வாகனத்திற்கு காப்பீடு அளிக்கிறது.
5. விபத்து மூலம் மற்றொரு நபரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் நபரின் உயிருக்கு ஆபத்து மற்றும் காயங்கள் ஏற்பட்டாலும் இத்திட்டம் காப்பீடளிக்கிறது.
6. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.
மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம் :
1. மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம் என்பது மூன்றாம் நபருக்கு மட்டும் காப்பீடு அளிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்ட மற்ற சேதங்களுக்கும் இத்திட்டமானது முழுப் பொறுப்பாகும்.
2. மேலும் வாகனத்தின் உதிரிப் பாகங்கள் மற்றும் சில துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
3. கணக்கீடு காப்பீட்டுத் திட்டத்திற்கான தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...