மதுரையில்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், தாமதமாக
பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும்
கல்வித்துறையில் 5 சிறப்பு ஆய்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை சி.இ.ஓ., கோபிதாஸ் பொறுப்பேற்றது முதல் தினமும் ஏதாவது ஒரு அரசு பள்ளிக்கு ஆய்வுக்கு செல்கிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இதுபோன்ற ஆய்வை விரிவுபடுத்த நான்கு டி.இ.ஓ.,க்கள் மற்றும் எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் தலைமையில் 5 சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் பி.இ.ஓ.,க்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று முதல் இக்குழுக்களின் ஆய்வு துவங்கியுள்ளது. இதன் செயல்பாடுகளை 'ஆப்பரேஷன் - இ (எஜூகேஷன்)' என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.
அதிகாரி ஒருவர்கூறியதாவது:ஏதாவது ஒரு காரணத்தை கூறி சில தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்வதில்லை. சிலர் டி.இ.ஓ.,க்கள், பி.இ.ஓ.,க்கள் வேலை சொல்லி உள்ளதாக கூறி வகுப்புக்கு செல்வதில்லை. அதேசமயம் வருகை பதிவேட்டில் சரியான நேரத்தில் வந்ததாக பதிவு செய்கின்றனர். காலை இறை வணக்கம் பல பள்ளிகளில் நடப்பதில்லை.
இக்குழுக்கள் கண்காணிப்பால் இதுதவிர்க்கப்படும். எந்தெந்த பள்ளிக்கு இக்குழுக்கள் ஆய்வு செல்ல வேண்டும் என்ற தகவல் ஒருமணிநேரத்திற்கு முன் தான் தெரிவிக்கப்படும். ஆய்வில் ஆசிரியர்கள் மீது குறை இருந்தால் அங்கேயே 'மெமோ' கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...